பிரதமர் இன்று தமிழகம் வருகை..! கூட்டணி தலைவர்களுடன் மேடையேறும் மோடி..
தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுராந்தகம் பகுதியில் கூட்டணிக்கட்சி தலைவர்களுடன் பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி
தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு முழுவடிவம் கொடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை அதிகப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை அடுத்த மதுராந்தகம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
அதிமுக + பாஜக
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக தவிர்த்து பிற முக்கிய கட்சிகள் எதுவும் இடம் பெறாமல் இருந்தன. ஆனால் பிரதமர் மோடியின் தமிழக வருகை உறுதி செய்யப்பட்டதும் பாமக, அமமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அடுத்தடுத்து கூட்டணியில் இணையத் தொடங்கின.
கூட்டணி கட்சிகள்
தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக, அன்புமணி பாமக, அமமுக, புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய பாரதம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.
மதுராந்தகத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் வந்து சேர்கிறார். பகல் 1.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர், 2.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் வந்து சேர்கிறார்.
3.10 மணியளவில் பொதுக்கூட்டடத்தில் உரையாற்றத் தொடங்கும் பிரதமர் கூட்டம் நிறைவு பெற்றதும் 4.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வழியாக டெல்லி புறப்படுகிறார். பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாமக, அமமுக தலைவர்கள் உரையாற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

