- Home
- Tamil Nadu News
- விஜய் அரசியல் சக்தியாக மாறிவிட்டார்..! காங்.க்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும்..! பிரவீன் சக்கரவர்த்தி திட்டவட்டம்
விஜய் அரசியல் சக்தியாக மாறிவிட்டார்..! காங்.க்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும்..! பிரவீன் சக்கரவர்த்தி திட்டவட்டம்
60 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத நிலையில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு அதிக தொகுதிகள், ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் சலசலப்பு..?
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளக் கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகியும், ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பருமான பிரவீன் சக்கரவத்தி அண்மை காலமாக தவெக தலைவர் விஜய் குறித்து தெரிவித்து வரும் கருத்துகள் கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கி வருகிறது.
அரசியல் சக்தியாக விஜய்..!
அந்த வகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் விஜய் அரசியல் சக்தியாக மாறிவிட்டார். அதனை யாராலும் மறுக்க முடியாது. அவரை நடிகர் என்பதற்காக மக்கள் பார்க்க வரவில்லை. மாறாக விஜய்யை மக்கள் அரசியல் தலைவராகப் பார்க்கின்றனர். அதனால் தான் அவரைப் பார்ப்பதற்காக கொத்து கொத்தாக மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். நான் விஜய்யை சந்தித்து பேசியது உண்மை தான். ஆனால் அந்த சந்திப்பில் என்ன பேசினோம் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு
தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சி, அதிகாரத்தில் இல்லை. அதனால் வரக்கூடிய தேர்தலில் அதிக சீட்டு, ஆட்சியில் பங்கு வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் எண்ணமாக உள்ளது. இது தான் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தின் நலனுக்கு நன்மை தரும்.
தனிப்பட்ட ஆதாயத்திற்காக திமுகவை ஆதரிக்கும் காங்கிரஸ்..?
என்னுடைய கருத்தில் சில மாநில நிர்வாகிகள் உடன்படாமல் இருக்கலாம். காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியிலானது. இதில் கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் கூட்டணி குறித்து முடிவெடுப்பது தலைமை மட்டும் தான். ஊட்டிவிடும் கையை யாரும் கிள்ளி விடமாட்டார்கள். அந்த வகையில் திமுக கூட்டணியை ஆதரிப்பவர்களுக்கு அவர்களது தொகுதியில் திட்டங்கள் நிறைவேறுவுதற்காகவோ, அல்லது அவர்கள் மீது இருக்கும் வழக்குக்காகவோ ஆதரிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

