- Home
- Tamil Nadu News
- விஜய்க்காக களத்தில் குதித்த காங்கிரஸ் தலைவர்.. ஜனநாயகனுக்கு ஆதரவு.. உ.பி.க்கள் ஷாக்!
விஜய்க்காக களத்தில் குதித்த காங்கிரஸ் தலைவர்.. ஜனநாயகனுக்கு ஆதரவு.. உ.பி.க்கள் ஷாக்!
சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுகவும், காங்கிரசும் கூட்டணி வைத்துள்ள நிலையில், இந்த கூட்டணி நீடிக்குமா? இல்லையா? என்பது மதில் மேல் பூனையாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்டு வருகிறது.

ஜனநாயகன் திரைப்படம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நடிகர் விஜய்யின் தவெக, முதல் தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராக உள்ளது. அரசியலில் கால் பதித்து விட்டதால் சினிமாவுக்கு முழுக்கு போட்ட விஜய், 'ஜனநாயகன்' என்ற தனது கடைசி படத்தில் நடித்து முடித்து விட்டார்.
தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை
ஹெச்.வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பொங்கல் விடுமுறையை குறிவைத்து வெளியாக உள்ளது. பட வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த படத்துக்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. விண்ணப்பித்து பல நாட்களாகியும் மத்திய தணிக்கை வாரியம் சென்சார் சர்டிபிகேட் வழங்காதது விஜய் ரசிகர்களுக்கும், தவெகவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு காங்கிரஸ் தலைவர் சப்போர்ட்
'வருங்கால முதல்வர் விஜய்யின் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இருப்பது சரியானது அல்ல' என்று தவெக மாநிலக்குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை என்றால் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும்
இது தொடர்பாக திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ''ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கவில்லை என்றால் அது மிகவும் தவறு. இது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
அந்த படத்துக்கு ஏன் தணிக்கை சான்றிதழ் கொடுக்கவில்லை என்ற விவரம் எனக்கு தெரியவில்லை. அப்படி தணிக்கை சான்றிதழ் கொடுக்காததில் உள்நோக்கம் இருந்தால் அது தவறு'' என்று தெரிவித்துள்ளார்.
திமுகவினர் ஷாக்
சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுகவும், காங்கிரசும் கூட்டணி வைத்துள்ள நிலையில், இந்த கூட்டணி நீடிக்குமா? இல்லையா? என்பது மதில் மேல் பூனையாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்டு வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கும், திமுக எம்.பி. அப்துல்லாவுக்கும் வார்த்தை மோதல் நடந்தது.
காங்கிரஸ் திமுகவை கழட்டி விட்டு தவெகவோடு கைகோர்க்க போவதாக செய்திகள் பரவின. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரியும் ஜனநாயகன் படத்துக்கு ஆதரவாக பேசியிருப்பது திமுக உடன்பிறப்புகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

