விஜய் மீது கை வைத்த சிபிஐ..! 12ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு..!
கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் டெல்லியில் உள்ள விசாரணை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

கரூர் துயர சம்பவம்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி வேலுச்சாமி புரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது மொத்த நாட்டையும் உலுக்கியது.
சிபிஐ விசாரணை
இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் விஜய் தரப்பு மீதும், தமிழக அரசு மீது விஜய் தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்ட்டவர்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
விஜய் நேரில் ஆஜராக சம்மன்
அதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் தற்போது கட்சியின் தலைவர் விஜய்யை நேரில் ஆஜராகுமாறு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஐ அளித்துள்ள சம்மனில், வருகின்ற 12ம் தேதி டெல்லியில் அமைந்துள்ள விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

