சூர்யா பட பாணியில் ரெய்டு.! கையும் களவுமாக சிக்கிய போலி வருமானவரித்துறை அதிகாரி
பழனியில் செங்கல் சூளை உரிமையாளரிடம் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து பணம் பறிக்க முயன்ற நபர் கைது. போலி அடையாள அட்டையை காட்டி மிரட்டிய சந்திரசேகர் சிக்கினார்.

Fake income tax officer : நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம் இந்தப்படத்தில் சூர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் போலியான வருமான வரித்துறை அதிகாரி, சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றி பணத்தை கொள்ளையடிப்பார்கள். அதே போல ஒரு சம்பவம் பழனி அருகே நடைபெற்றுள்ளது.
தற்போது தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. இதனை பயன்படுத்தி பல இடங்களில் போலியாக ஒரு சிலர் பெரிய தொழில் அதிபர்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
செங்கல் சூளையில் போலி ரெய்டு
இந்த நிலையில் பழனி அடுத்த சத்திரப்பட்டி பகுதிகளில் அதிகளவிலான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை தனியார் செங்கல் சூளைக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் வருவது போல் டிராவல்ஸ் காரில் வந்த சந்திரசேகர் என்ற நபர், தன்னை வருமானவரித்துறை அதிகாரியாக அறிமுகம் செய்துள்ளார்.
தொடர்ந்து தனது வருமான வரித்துறை அடையாள அட்டையும் காண்பித்துள்ளார். அப்போது செங்கல் சூளையில் வருமானத்திற்கு குறைவான அளவு விற்பனை செய்வதாக மட்டுமே காட்டி பல லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக புகார் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பணம் கேட்டு மிரட்டல்
மேலும் சேம்பரில் வரும் வருமானத்திற்கு குறைவாக கணக்கு காட்டுவதாக புகார் வந்துள்ளதாக தெரிவித்த அவர் செங்கல் சூளை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனால் சந்திரசேகரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சூளை மேலாளர் சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்திரசேகரிடம் அடையாள அட்டையை பெற்று விசாரணை மேற்கொண்டனர்.
போலி வருமான வரித்துறை அதிகாரி கைது
அப்போது சந்திரசேகர் வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து பணம் பறிக்கும் முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சந்திரசேகரை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வேறு எந்த எந்த இடத்தில் வருமான வரித்துறை அதிகாரி என போலியாக கூறி மோசடி செய்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.