- Home
- Tamil Nadu News
- நீக்கப்படுகிறார் அன்புமணி.? ராமதாசுக்கு முழு அதிகாரம் - பாமகவில் தவிக்கும் நிர்வாகிகள்
நீக்கப்படுகிறார் அன்புமணி.? ராமதாசுக்கு முழு அதிகாரம் - பாமகவில் தவிக்கும் நிர்வாகிகள்
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான உட்கட்சி மோதல் தீவிரமடைந்து, கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

பாமகவில் உச்சக்கட்டத்தில் மோதல்
பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது இரு தரப்பிற்கும் கூட்டணி அமைப்பது தொடர்பாக வாக்குவாதம் எழுந்துள்ளது.
ஆனால் அப்போது தொடங்கிய மோதல் புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் வெட்ட வெளிச்சம் ஆனது. இரு தரப்பிற்கும் இடையே கட்சி நிர்வாகம், தலைமைப் பதவி, மற்றும் முக்கிய நியமனங்கள் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடுகளால் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு காரணம் என்ன.?
புதுச்சேரியில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தன் பரசுராமனை இளைஞர் அணி தலைவராக நியமித்தார். இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார், இதனால் மேடையிலேயே வார்த்தை மோதல் வெடித்தது. ராமதாஸ், "நான் உருவாக்கிய கட்சி, எனது முடிவை ஏற்காதவர் வெளியேறலாம்" என்று கூற, அன்பு மணி பனையூரில் தனி அலுவலகம் திறந்து செயல்படுவதாக அறிவித்து நிர்வாகிகள் தன்னை சந்திக்க அங்கே வரும்படி அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து இருதரப்பும் மாறி மாறி விமர்சனங்களை வெளியிட்ட நிலையில், ஒரு கட்டத்தில் 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது என் முதல் தவறு. மேடை நாகரிகமின்றி செயல்படுகிறார். தாயை தாக்க முயன்றவர், குருவை அவமதித்தவர் என்று கூறினார் ராமதாஸ் பகீர் தகவலை தெரிவித்தார்.
பாமக நிர்வாகியை நீக்கிய ராமதாஸ்
பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணி தன்னை மிரட்டியதாகவும், "இல்லையெனில் எனக்கு கொள்ளி வைக்க வேண்டியிருக்கும் என அன்புமணி கூறியதாகவும் ராமதாஸ் தெரிவித்தார். ஆனால் இது அனைத்துமே பொய் என அன்புமணி மறுப்பு தெரிவித்து. ராமதாஸ் குழந்தையாக மாறி விட்டார் என பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த சூழலில் தான் பாமகவின் முக்கிய நிர்வாகியும் எம்எல்ஏவுமான சேலம் மேற்கு எம்.எல்.ஏ. அருள், அன்புமணிக்கு எதிராக ராமதாஸுக்கு ஆதரவாக பேசியதால், அன்புமணி அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார். ஆனால், ராமதாஸ் இதை ஏற்காமல், அருளை இணைப் பொதுச் செயலாளராகவும், சட்டமன்றக் குழு கொறடாவாகவும் தொடர அறிவித்தார்.
எம்எல்ஏ அருளை நீக்கிய அன்புமணி
இரு தரப்பிற்கும் இடையே மோதல் பொதுவெளியில் நடந்த நிலையில் அன்புமணி ஒரு கட்டம் மேலே சென்று சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் வழங்கியது பாமக இரண்டாக உடைந்தது உறுதியானது. இந்த மோதல் காரணமாக பாமகவில் குழப்பம் நீடிக்கிறது. கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் இரு தரப்பாக பிரிந்துள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த உட்கட்சிப் பிளவு பாமகவின் அரசியல் செல்வாக்கை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் பாமகவில் இருந்து அன்புமணியை நீக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் நடந்த பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அன்புமணி மீது நடவடிக்கை.?
இந்த கூட்டத்தில் அன்புமணியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ்-க்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனரும், தலைவருமான ராமதாஸ் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் அன்புமணி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுப்பட்டுள்ளது. மேலும் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க ராமதாஸ்க்கு அதிகாரமும் இந்த செயற்குழுவில் வழங்கப்பட்டுள்ளது.
எனவே ஏற்கனவே இருதரப்பும் நிர்வாகிகள் நீக்கி வரும் நிலையில் அடுத்ததாக ராமதாஸ்க்கு எதிராக அரசியல் செய்து வரும் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இந்த முடிவு ராமதாஸ் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.