- Home
- Tamil Nadu News
- எங்க அப்பாவுக்கு 87 வயதாகிவிட்டது! அன்புமணி நீதிமன்றத்தில் போட்ட ஒரே போடு! ராமதாஸ்க்கு பறந்த நோட்டீஸ்!
எங்க அப்பாவுக்கு 87 வயதாகிவிட்டது! அன்புமணி நீதிமன்றத்தில் போட்ட ஒரே போடு! ராமதாஸ்க்கு பறந்த நோட்டீஸ்!
அன்புமணி கட்சியின் அடிப்படை விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படுவதால், கட்சி அடையாளங்களைப் பயன்படுத்த அவர்களுக்கு உரிமை இல்லை என ராமதாஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ராமதாஸ் - அன்புமணி மோதல்
கடந்த சில மாதங்களாக பாமகவில் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது. இதனால் கட்சியின் நிர்வாகிகள் இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை அன்புமணி ராமதாஸ் தரப்பினர் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ராமதாஸ் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு
அந்த மனுவில், கட்சியின் அடிப்படை விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படுவதால், கட்சி அடையாளங்களைப் பயன்படுத்த அவர்களுக்கு உரிமை இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி எம். தர்மபிரபு முன்னிலையில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸ் தாக்கல் செய்த மனு குறித்து அன்புமணி ராமதாஸ் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 9ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
ராமதாஸை தவறாக வழிநடத்துகிறார்கள்
இந்நிலையில் அன்புமணி தாக்கல் செய்த பதில் மனுவில்: ராமதாஸ்-க்கு 87 வயதாகவிட்டதால் உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்ச்சி காரணமாக கட்சியின் நிர்வாக ரீதியான முடிவுகளை எடுக்க முடியவில்லை. இதை பயன்படுத்தி ராமதாஸை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர். பாமகவுக்கு எதிராக செயல்படுகின்றனர். பாமக தலைவர் என ராமதாஸ் தன்னை அறிவித்துக்கொண்டது சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல. நிறுவனர் என்ற முறையில் கட்சிக்கு ஆலோசனை மற்றும் வழங்காட்டுதல் மட்டுமே ராமதாஸ் செய்ய முடியும்.
ராமதாஸ் பதிலளிக்க உத்தரவு
தன்னை தானே தலைவர் என ராமதாஸ் அறிவித்து கொண்டு விதிகளை திருத்தியதை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தவில்லை. கட்சியின் பெயர், சின்னம், கொடி, கொள்கை ஆகியவற்றின் மீதான உரிமை தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது. அன்புமணி தாக்கல் செய்த இந்த மனுவுக்கு மார்ச் 11ம் தேதிக்குள் ராமதாஸ் பதிலளிக்க உத்தரவிட்டு சென்னை உரிமையியல் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

