40 நாட்களுக்கு பிறகு! பழனி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்!
பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் முடிந்து, சோதனை ஓட்டத்திற்குப் பிறகு இன்று முதல் பக்தர்கள் ரோப் காரில் பயணிக்கலாம்.

உலக பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் திருக்கோவில். இக்கோவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் விசேஷ நாட்களாகும். இக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்து முருகன் தரிசிக்கின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை இருந்தாலும் முதியவர்கள் மாற்றுத் திறனாளி பக்தர்கள் எளிதாக மலை மீது சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் ரோப் கார் மற்றும் வின்ச் சேவை இயக்கப்பட்டு வருகிறது. ரோப் காரில் பயணம் செய்யும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆண்டு தோறும் ஒரு மாதம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
அதன் அடிப்படையில் கடந்த மாதம் 11 ம் தேதி முதல் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. ரோப்காரில் ஊழியர்கள் வருடாந்திர பராமரிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர். ரோப் காரில் பெட்டிகள், இரும்பு சக்கரங்கள், கம்பி வடம் உள்ளிட்டவை மாற்றப்பட்டு கடந்த இரு தினங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் பக்தர்கள் வசதிக்காக ரோப்கார் சேவை இயக்கப்பட்டது. முன்னதாக ரோப்கார் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ரோப் கார் சேவை துவக்கி வைக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரோப் கார் சேவை இயக்கப்பட்டதால் பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் ரோப்காரில் பயணம் செய்தனர்.