மீண்டும் திமுக ஆட்சி? ஓபிஎஸ்ஸின் பரபரப்பு கணிப்பு- இது தான் முக்கிய காரணமாம்
DMK government forming again : 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் பிரிந்துள்ளதால் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இன்னும் 4 முதல் 5 மாத காலமே உள்ள நிலையில், இன்னும் பலம் வாய்ந்த கூட்டணியை கொண்ட திமுகவை வீழ்த்தும் வகையில் எதிர்கட்சிகள் கூட்டணியை அமைக்கவில்லை. ஒவ்வொரு கட்சியும் தனிதனி அணியாக உள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கவே வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், முத்துராமலிங்க தேவர் திருவுருவச்சிலைக்கு வெள்ளியிலான கவசத்தை ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தவெகவுடன் கூட்டணி அமைத்தாலும் உங்களது அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,
யாருடைய அரசியல் வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கப்போகிறது என்பது மக்கள் கையில் உள்ளது என தெரிவித்தார். கூட்டணி தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஒரு நல்ல முடிவை தமிழக மக்கள் நலன் கருதி எடுக்க உள்ளோம். அதன் உங்களிடம் முதலில் தெரிவித்துவிட்டு தான் மற்றவரிடம் சொல்லுவேன் என கூறினார்.
கரூரில் துயர சம்பவம் நடைபெற்று விட்டது அங்கு சென்று ஆறு கூறினாலும் அவர்களை சென்னைக்கு அழைத்து ஆடி கூறினாலும் எல்லாம் ஒன்றுதான். அதற்குள் உள்ளே நுழைந்து காரணங்களை சொல்லிக் கொண்டு இருப்பது சரியாக இருக்காது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பு எந்த நிலையில் உள்ளது என்ற கேள்விக்கு அவர் கூறுகையில், கழகத்தின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க போகும் உரிமை கழகத்திற்கு தொண்டர்களுக்கு தான் உள்ளது. கழகத்துடைய தொண்டர்கள் தேர்தல் மூலமாகத்தான் பொதுச்செயலாளர் தேர்வு செய்ய முடியும். இதுதான் கழகத்தின் சட்ட விதி, இந்த சட்டவிதையை புரட்சித்தலைவர் அவர்கள் உயிலில் கூட எழுதி வைத்துள்ளார்கள்.
ஆனால் இன்று சட்டவிதிகள் மாற்றப்பட்டு 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழிய வேண்டும் என மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஐந்து வருடம் தலைமைக் கழகத்தின் நிர்வாகியாக இருக்க வேண்டும் என திருத்தப்பட்டுள்ளது. பல்வேறு விதிகள் காலப்போக்கில் மாற்றப்பட்டாலும் பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் விதி மட்டும் மாற்றக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பான அனைத்து வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக கூறினார்.
மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், இன்றைய சூழலில் அவருக்கு தான் வாய்ப்பு உள்ளது. அனைத்து எதிர்கட்சிகளும் பிரிந்து உள்ளது. அதிமுக பிரிந்து கிடக்கிறது. பாமகவில் சண்டை, ராமதாஸ் ஐயாவிற்கும் அன்புமணிக்கும் .
இப்படி உள்ள சூழலில் அவர்களுக்கு தான் வாய்ப்பு உள்ளது. அது தானே கண் கூடாக தெரிகிறது. திமுகவிற்கு ஏன் வாய்ப்பு உள்ளது என்பதையும் சொல்ல வேண்டும். எல்லா எதிர்கட்சிகளும் பிரிந்துள்ளது. பிரிந்து கிடப்பதால் வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் சொல்கிறார்கள். என் மீது பழி போடாதீங்க என கூறி விட்டு சென்றார்.