கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்வு நடக்கும் ரிசார்டில் தவெக பொருளாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
Permission Denied for TVK Treasurer Venkatraman : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 27ந் தேதி கரூரில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அந்த நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். உயிரிழந்த 41 பேரில் 18 பேர் பெண்கள், 15 பேர் ஆண்கள், 8 குழந்தைகளும் இதில் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் 34 பேர் கரூர் மாவட்டத்தையும், தலா இரண்டு பேர் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களையும், ஒருவர் சேலம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சமும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க நடிகர் விஜய் கரூர் செல்வதாக இருந்தது. இதற்காக அங்குள்ள திருமண மண்டபங்களில் அனுமதி வாங்க தவெகவினர் சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை..
தவெக பொருளாளருக்கு அனுமதி மறுப்பு
இதையடுத்து அதிரடி முடிவெடுத்த விஜய், கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கே அழைத்து வந்து அவர்களுக்கு ஆறுதல் கூற முடிவு செய்தார். இதற்காக ஆம்னி பேருந்துகளை தயார் செய்து அவர்களை அழைத்து வந்து, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தனி அறை ஒதுக்கப்பட்டு, அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். அந்த ரிசார்டுக்குள் தவெக முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
அப்படி இருக்கையில் அந்த நிகழ்வு நடக்கும் ரிசார்டில் த.வெ.க. பொருளாளர் வெங்கட்ராமனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நிகழ்ச்சிக்கான அடையாள அட்டை இல்லாததால் அவரை அனுமதிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அவர், வாகனத்தின் ஹாரனை அடித்துக்கொண்டே இருந்துள்ளார். பின்னர் உள்ளே இருப்பவர்களிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசி, அவர்கள் வந்த பின்னரே வெங்கட்ராமன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
