- Home
- Tamil Nadu News
- மாடு, மரங்களை அடுத்து மலைகளுடன் பேசப்போகும் சீமான்! நாதக தம்பிகளுக்கு குட் நியூஸ்!
மாடு, மரங்களை அடுத்து மலைகளுடன் பேசப்போகும் சீமான்! நாதக தம்பிகளுக்கு குட் நியூஸ்!
சீமான், மலைகள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளிலிருந்து காப்பாற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மலைகளுக்கான மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இடத்தில் இந்த மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீமான் நடத்தும் மலைகள் மாநாடு
திரைப்பட இயக்குனரும், நடிகருமான சீமான், 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கினார். அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் அவர், 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதல் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி வருகிறார்.
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி
ஆரம்ப கட்டத்தில் 1.1% ஆக இருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் 8.1% ஆக உயர்ந்திருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
சீமானின் பேச்சுகள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அவ்வப்போது மாநாடுகளை நடத்தி வரும் அவர், இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்.
மாடுகள், மரங்களுக்கு மாநாடு
அந்த வகையில், கடந்த ஜூலை 10-ம் தேதி மதுரையில் மாடுகள் மாநாட்டையும், ஆகஸ்ட் 30-ம் தேதி திருவள்ளூரில் மரங்களின் மாநாட்டையும் சீமான் நடத்தினார். அவரது இந்த முயற்சி, இயற்கை மற்றும் விலங்குகள் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், மலைகளும், நீர்நிலைகளும் ஆக்கிரமிப்புகளின் பிடியில் அழிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, அவற்றை காப்பாற்றும் வகையில் மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.
மலைகளுக்கான மாநாட்டு
அந்த வகையில், மலைகளுக்கான மாநாட்டை சீமான் நடத்த இருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஒரு மாவட்டத்தில் இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிகிறது. அதற்கான இடத்தேர்வு நடைபெற்று வருகிறது. மலைகளின் மாநாட்டைத் தொடர்ந்து, நீர்நிலைகளுக்கான மாநாடும் நடத்தப்பட இருப்பதாக நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.