ஆதி நீயே! ஆழித்தாயே! சீமானின் அடுத்த சம்பவம்.. நவ. 21ல் கடலம்மா மாநாடு!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு' நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சீமான் நடத்தும் அடுத்த மாநாடு!
இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து நடத்தி வரும் தொடர் மாநாடுகளின் அடுத்த கட்டமாக, தற்போது கடல் வளத்தைப் பாதுகாப்பது குறித்து மாநாட்டை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுவரை 'மரங்கள் மாநாடு', 'கால்நடை மாநாடு', 'மலைகள் மாநாடு' என இயற்கை வளங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பல்வேறு மாநாடுகளை நாம் தமிழர் கட்சி நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு'
இந்நிலையில், கடல் வளத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துரைக்கும் நோக்கில், திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும் என சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை சார்பில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
"திருநெல்வேலி மாவட்டம், கூத்தன்குழி முதன்மை சாலையில் வரும் நவம்பர் 21-ந்தேதி மாலை 4 மணியளவில், 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும். 'ஆதி நீயே! ஆழித்தாயே!' என்ற முழக்கத்தை முன் வைத்து இம்மாநாடு நடைபெறும்.
நெல்லையில் சீமான்
இம்மாபெரும் மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."
இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். கடல் வளங்கள் மற்றும் கடல்சார் உயிரினங்களைப் பாதுகாக்கும் அவசரத் தேவையை இந்த மாநாடு வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.