தமிழக அரசின் அசத்தல் மூவ்: புதிதாக வேலை பெறும் 47,000 இளைஞர்கள் - முதல்வர் பெருமிதம்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.38 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் 46,931 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவையின் கூட்டம் செவ்வாய் கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வராக பங்கேற்கும் முதல் கூட்டம் என்பதால் இந்த கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த கூட்டத்தில் ரூ.38 ஆயிரம் கோடி மதிப்பில் 14 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 46,931 இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், மின்னணுப் பொருட்கள், பாதுகாப்பு, மருத்துவம், தோல் அல்லாத காலணிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின் வாகனங்கள், தொலைத்தொடர்பு எனப் பல்வேறு துறைகளில் பரவலாக 12 மாவட்டங்களில், 46,931 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய, ரூ.38,698.8 கோடி மதிப்பிலான 14 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.