- Home
- Tamil Nadu News
- மருத்துவமனையில் ராமதாஸ்! ஓடோடிச் சென்று கையை பிடித்து உருகிய முதல்வர் ஸ்டாலின்! பாமகவினர் நெகிழ்ச்சி!
மருத்துவமனையில் ராமதாஸ்! ஓடோடிச் சென்று கையை பிடித்து உருகிய முதல்வர் ஸ்டாலின்! பாமகவினர் நெகிழ்ச்சி!
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸிடம் முதல்வர் ஸ்டாலின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். இதேபோல் வைகோவின் உடல்நிலை குறித்தும் அவரது குடும்பத்தினரிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

மருத்துவமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனரும், தமிழகத்தில் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான 86 வயதான டாக்டர் ராமதாஸ், நேற்று இரவு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதயம் சார்ந்த பிரச்சனைக்காக அவர் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பாமக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அப்போலோ மருத்துவமனை அறிக்கை
இன்று காலை ராமதாஸூக்கு ஆஞ்சியோகிராமி (ஆஞ்சியோ) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ''ராமதாஸ்க்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழு பரிசோதனை முடிந்தவுடன் அவர் வீடு திரும்புவார்'' என்று கூறப்பட்டு இருந்தது.
ராமதாஸிடம் உடல்நலம் கேட்டறிந்த ஸ்டாலின்
ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்ததும் அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி மருத்துவமனைக்கு ஓடோடி வந்தார். இந்நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அப்போலோ மருத்துவமனைக்கு வந்து ராமதாஸின் உடல்நிலை குறித்து அவரிடம் கேட்டறிந்துள்ளார். ஸ்டாலினுடன் மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோரும் வந்திருந்தனர்.
பாமகவினர் நெகிழ்ச்சி
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட மு.க.ஸ்டாலின், ''தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் பெருமதிப்பிற்குரிய மருத்துவர் ராமதாஸ்அய்யா அவர்களைச் சந்தித்து, அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் விரைந்து நலம்பெற்று, தமது வழக்கமான பணிகளைத் தொடர்ந்திட விழைகிறேன்'' என்று கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் ஓடோடிச் சென்று ராமதாஸை பார்த்து நலம் விசாரித்து இருப்பது பாமகவினரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
வைகோ உடல் நலம் குறித்தும் விசாரித்த ஸ்டாலின்
இதேபோல் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ உடல்நலக்குறைவு காரணமாக அதே அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வைகோவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினருடனும், மருத்துவர்களிடமும் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''அண்ணன் வைகோ அவர்கள் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்ததுமே நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். இன்று மருத்துவமனைக்குச் சென்று, அவரது குடும்பத்தாரிடமும், மருத்துவரிடமும் அவரது சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தேன்'' என்றார்.