- Home
- Tamil Nadu News
- உழைப்பால் உயரும் உதயநிதி.. மகனுக்கு பூரிப்போடு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
உழைப்பால் உயரும் உதயநிதி.. மகனுக்கு பூரிப்போடு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக,எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும் என்று குறிப்பிட்டு துணைமுதல்வர் உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துணைமுதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து
தமிழகத்தின் துணைமுதல்வரும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதியின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்
இதனைத் தொடர்ந்து தனதுதந்தையும், முதல்வருமான ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! இளைஞரணிச் செயலாளராக - விளையாட்டுத் துறை அமைச்சராக - மாண்புமிகு துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!
காட்சிக்கு எளியவனாக
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக நான் உனக்கு அறிவுறுத்துவது, காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக,எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும். இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

