தேவைப்பட்டால் விஜய் கைது செய்வோம்..! அமைச்சர் துரைமுருகன் அதிரடி
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், விஜய் மீது வழக்கு பதியப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய்யின் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 10 குழந்தைகள் உட்பட 18 பெண்கள் உள்ளிட்டவர்கள் பலியாகினர்,
சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் போலீசாரிடம் 10,000 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட நிலையில், 25,000-க்கும் மேற்பட்டோர் கூடினர். மேலும் தவெக விஜய்யின் வருகை 4-7 மணி நேரம் தாமதமானதால் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்தனர்.
ஒரு கட்டத்தில் கூட்டத்தில் இருந்து வெளியே செல்லவும் முடியாமல் தவித்தனர். மேலும் தடுப்புகளை உடைத்து தகரக் கூரைகள் மற்றும் மரங்களில் ஏறியவர்கள் விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டு நெரிசல் விஸ்வரூபம் எடுத்தது. இதன் காரணமாக கொத்து கொத்தாக உயிரிழப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் தவெக தலைவர்கள் மீது கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. முதல் தகவல் அறிக்கையில் 11 பாதுகாப்பு விதிகளை மீறியதாகக் குறிப்பிடப்பட்டது. மேலும் கூட்டத்தை அதிகரித்து காட்ட வேண்டும் என்பதற்காகவே கால தாமதமாக விஜய் வந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.நிர்மல் குமார் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் தவெக தலைவர் விஜய் மீது எந்த வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர கேள்வி எழுப்பியிருந்தனர். நீதிமன்றமும் விஜய் மீது நடவடிக்கை எடுக்காத்து ஏன் என விளக்கம் கேட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழக மூத்த அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனிடம், தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவால் விடும்படி பேசியுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர்,
அவர் தனது கட்சி தொண்டர்களுக்காக பேசியுள்ளார். விஜய்யை கைது செய்யும் சூழல் வந்தால் கைது செய்வோம். தேவையில்லாமல் யாரையும் கைது செய்ய மாட்டோம் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.