- Home
- Tamil Nadu News
- பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்.. இனி 12 மாதமும் சம்பளம், ரூ.2500 ஊதிய உயர்வு.. அமைச்சர் மகேஸ் அறிவிப்பு
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்.. இனி 12 மாதமும் சம்பளம், ரூ.2500 ஊதிய உயர்வு.. அமைச்சர் மகேஸ் அறிவிப்பு
கடந்த சில தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதிநேர ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.2500 ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

பகுதிநேர ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றக் கூடிய பகுதி நேர ஆசிரியர்கள் தலைநகர் சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றைய தினம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அலுவலகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொங்கல் தினத்தில் போராட்டமா..?
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், “பொங்கல் பண்டிகை தினத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துவதாகவும், உடனடியாக இந்த விவகாரத்தில் ஆசிரியர்களுக்கு சாதகமான வகையில் முடிவெடுக்குமாறும் முதல்வர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இன்றைய தினம் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ரூ.2500 ஊதிய உயர்வு
இந்த பேச்சுவார்த்தையில், ரூ.12500ஆக இருந்த ஆசிரியர்களின் ஊதியம் ரூ.2500 உயர்த்தப்பட்டு ரூ.15000ஆக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்கப்படுவதில்லை. வருடத்திற்கு 11 மாதங்கள் மட்டுமே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஒரு மாதம் நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை எப்படி நடத்துவது என ஆசிரியர்கள் கேள்வி எழுப்பினர்.
மே மாதத்திற்கும் சம்பளம்
ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது. ஆகவே அவர்களுக்கு வழக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்ட ரூ.15000ல் பகுதி ஊதியம். அதாவது ரூ.7500 வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதனையும் அவர்கள் உயர்த்த வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனையும் உடனடியாக ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் மே மாதம் ரூ.10000 ஊதியமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

