- Home
- Tamil Nadu News
- ஓய்வூதியம் அதிரடி உயர்வு.! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்.! குஷியில் ஊழியர்கள்
ஓய்வூதியம் அதிரடி உயர்வு.! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்.! குஷியில் ஊழியர்கள்
Family Pension Scheme: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, துறை மற்றும் EPF மூலம் ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் கருணைக் கொடையை ரூ.2000 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை பாதுகாத்திடும் வகையில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள், பொங்கல் கருணைக் கொடை, குடியிருப்புகள், குடும்ப நலநிதி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், முழு உடற் பரிசோதனைத் திட்டம் போன்ற பல்வேறு முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
ஓய்வு பெற்ற பணியாளர்கள்
இந்துசமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளர்கள் மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை வழங்கப்பட்டு வந்த நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றப்பின், 2023-24 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி, 2024 ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு முதன்முறையாக பொங்கல் கருணை கொடையாக ரூ.1000மும், அதனைதொடர்ந்து 2025 ஆம் ஆண்டு முதல் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் முதன்முறையாக பொங்கல் கருணை கொடையாக ரூ.1000ம் வழங்கப்பட்டது.
கருணைக்கொடை ரூ.2000
2025 – 2026 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்புகளில் “துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் பொங்கல் கருணைக் கொடை ரூ.1000ம், அவர்களின் நலன்கருதி ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படும்“ என்றும், “திருக்கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, பணியாளர் சேமநலநிதி நிறுவனம் (EPF) மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் முதல்முறையாக பொங்கல் கருணைக்கொடை ரூ.2000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
பொங்கல் கருணைக் கொடை
அந்த அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைக் கொடை ரூ.1,000த்தை ரூ.2,000ஆக உயர்த்தி அதற்கான காசோலைகளையும், தொழிலாளர் சேமநலநிதி (EPF) மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முதல்முறையாக பொங்கல் கருணை கொடை ரூ. 2,000க்கான காசோலைகளையும் இன்று வழங்கினார். இதன் மூலம் துறை நிலையிலான மற்றும் தொழிலாளர் சேமநலநிதி மூலம் ஓய்வூதியம் பெறும் 3,069 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 796 குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இந்துசமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் 6,894 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 4,893 தினக்கூலி/தொகுப்பூதிய பணியாளர்கள் ஆக மொத்தம் 11,787 பணியாளர்களுக்கும், 3,865 ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் என மொத்தம் 15,652 நபர்கள் பொங்கல் கருணைக் கொடை பெற்று பயனடைகின்றனர்.

