- Home
- Tamil Nadu News
- ஸ்கெட்ச் போட்டு கொடுத்த காதலி.. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரவுடி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. 4 போலீஸ் சஸ்பெண்ட்
ஸ்கெட்ச் போட்டு கொடுத்த காதலி.. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரவுடி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. 4 போலீஸ் சஸ்பெண்ட்
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் காதலியை பார்க்க வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ஆதி, மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் காதலிக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கொளத்தூர் மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் ரவுடி ஆதி (எ) ஆதிகேசவன் (20). ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி ஆதி மீது கொலை மற்றும் அடிதடி உட்பட 9க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆதிக்கு ஆவடி ஏரிக்கரை தாழம்பூ தெருவை சேர்ந்த சுசித்ரா(21) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சுசித்ராவுக்கு கடந்த டிசம்பர் 18ம் தேதி குழந்தை பிறந்த மறுநாளே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
குழந்தை உயிரிழந்த தகவலை அறிந்த அதிர்ச்சி அடைந்த ஆதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு விரைந்துள்ளார். பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த சுசித்ராவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். சுசித்ராவுடன் உறவுக்கார பெண் வில்லிவாக்கம் பொன்னாங்கிணறு தெருவை சேர்ந்த சாருமதி(23) இருந்துள்ளார். நீண்ட நேரமாகிவிட்டதால் மருத்துவமனையிலேயே கள்ளக்காதலி சுசித்ரா மற்றும் சாருமதியுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள நியூ லேபர் வார்டு முன்பு மதுபோதையில் தூங்கியுள்ளார்.
அப்போது அதிகாலை 3.45 மணிக்கு 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஹெல்மெட் அணிந்து கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தது. அப்போது சுசித்ரா மற்றும் சாருமதி உடன் தூங்கி கொண்டிருந்த ரவுடி ஆதியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதில், ரவுடி ஆதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காதலி சுசித்ரா ஆதியை மருத்துவமனைக்கு அழைத்தது போல சூர்யா(20), அலிபாய்(20), கார்த்திக்(21) ஆகியோருக்கு போன் செய்து ஆதி மருத்துவமனைக்கு வந்த தகவலை தெரிவித்துள்ளார். அதன்படி 3 பேரும் தனது நண்பர்களுடன் வந்து ரவுடி ஆதியை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் காதலியுடன் இருந்த ரவுடி ஆதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 போலீசாரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர் 2 பேருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.

