- Home
- Tamil Nadu News
- எம்ஜிஆரின் ரூ.25 கோடி திருச்சி பங்களாவின் பட்டாவின் பெயர் மாற்றம்.. வெடித்த புது சர்ச்சை
எம்ஜிஆரின் ரூ.25 கோடி திருச்சி பங்களாவின் பட்டாவின் பெயர் மாற்றம்.. வெடித்த புது சர்ச்சை
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்க்கு சொந்தமான திருச்சியில் உள்ள பங்களாவின் பட்டா சட்ட விரோதமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
எம்.ஜி.ஆரின் திருச்சி பங்களா
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்கு சொந்தமான திருச்சியில் உள்ள ரூ.25 கோடி மதிப்புள்ள பங்களாவின் பட்டாவின் பெயர் சட்டவிரோதமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பட்டாவை எம்ஜிஆரின் வாரிசுகள் பெயரில் மாற்றித் தர வேண்டும் என்றும் திருச்சி காட்டூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சர்வேயர் சார்லஸ் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
ரூ.25 கோடி மதிப்புள்ள பங்களாவின் பட்டா பெயர் மாற்றம்
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, “திருச்சி உறையூர் திருத்தாந்தோணி சாலையில், மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சொந்தமான பங்களா மற்றும் காலியிடம் 80,000 சதுர அடி பரப்பளவில் உள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.25 கோடி இருக்கும். இந்த சொத்துக்கு, எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர், அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி மகன் மற்றும் மகள்கள் 10 பேர் வாரிசுகளாக பதிவு செய்து, தங்களது பெயரில் பட்டா பெற்றனர். இந்நிலையில், வாரிசுகளின் பெயர்கள் நீக்கப்பட்டு, 'அதிமுக பொதுச் செயலாளர்' என பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோட்டாச்சியரிடம் முறையீடு
அதன்பின்னர், அந்தப் பெயரும் நீக்கம் செய்யப்பட்டு, 'மதுரம் கணவர் கோவிந்தசாமி' என கணினி நிலப் பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் வாரிசுகளின் பெயர்களை பட்டாவில் இருந்து நீக்க வேண்டும் என்றால், கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்து அவரின் ஆணை பெற்று பெயர்களை நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்திருந்தேன். இதுதொடர்பாக, கோட்டாட்சியர் 1.10.2021 மற்றும் 18.10.2021 ஆகிய தேதிகளில் என்னை அழைத்து விசாரணை மேற்கொண்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் பெயரில் பட்டா மாற்றம்
இந்நிலையில், தற்போது நிலப்பதிவேட்டில் எம்.ஜி.ஆரின் வாரிசு பெயர்கள் பதியப்படாமல் உள்ளதுடன், 'மதுரம் கணவர் கோவிந்தசாமி' என்ற பெயரும் நீக்கம் செய்யப்பட்டு, 'பொதுச்செயலாளர் அதிமுக' என கணினியில் பதியப்பட்டுள்ளது. கோட்டாட்சியர் எந்த அடிப்படையில் 'மதுரம் கணவர் கோவிந்தசாமி' பெயரை நீக்கினார் என்றும் தெரியவில்லை. அதேசமயம் எம்.ஜி.ஆர் தனது பெயரில் கிரயம் பெற்று, பத்திரம் பெற்றுள்ள நிலையில், 'பொதுச் செயலாளர் அதிமுக' என்று பட்டாவில் பெயர் மாற்றம் செய்தது தவறு.
எம்.ஜி.ஆரின் வாரிசுகளுக்கு கொடுங்கள் - சார்லஸ் வேண்டுகோள்
எம்.ஜி.ஆர் தனது சொத்தை அதிமுகவுக்கு பத்திரம் மூலம் வழங்கியிருந்தாரா அல்லது உயில் ஏதேனும் எழுதி வைத்தாரா என்பதை விளக்க வேண்டும். ஆகவே, இந்த விவகாரத்தில் ஆட்சியர், கோட்டாட்சியரின் அலுவலக கோப்பைப் பெற்று, கோட்டாட்சியர் செய்த விசாரணை மற்றும் உத்தரவை பரிசீலனை செய்து, வறுமையில் வாடும் எம்.ஜி.ஆரின் வாரிசுகள் பெயர்களை மீண்டும் நிலப்பதிவேட்டில் பதிய உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் சார்லஸ் கூறியுள்ளார்.
முறைகேடு நடந்துள்ளது - சார்லஸ் பேட்டி
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய சார்லஸ், “எம்.ஜி சக்கரபாணியின் மகன் சந்திரன் எம்.ஜி.ஆர் பங்களா பட்டா பெயரை மாற்ற தொடர்ந்து அலைந்து கொண்டிருந்தார். கொரோனா தொற்று காரணமாக அவர் உயிரிழந்து விட்டார். எம்.ஜி.ஆரின் மற்ற வாரிசுகள் சித்தப்பா சொத்து எங்களுக்கு கிடைக்கும்போது கிடைக்கட்டும் என இதை அப்படியே விட்டு விட்டனர். முறையாக இந்த சொத்து எம்ஜிஆரின் வாரிசுகளுக்கு தான் சென்று சேர வேண்டும். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவில் முறைகேடாக பெயர் மாற்றம் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஆட்சியர் தலையிட்டு நல்ல தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும்” எனக் கூறினார்.
திருச்சியில் இறுதி காலத்தை கழிக்க விரும்பிய எம்.ஜி.ஆர்
திருச்சி மீது எம்.ஜி.ஆருக்கு எப்போதும் தனி பாசம் உண்டு. தன்னுடைய இறுதி காலத்தை திருச்சியில் கழிக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். அதற்காக குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து உறையூர் செல்லும் வழியில் இரண்டு ஏக்கர் பரப்பில் தோட்டத்துடன் கூடிய பங்களா ஒன்றை வாங்கினார். சோமரசம்பேட்டையைச் சேர்ந்த பாதிரியார் ஆரோக்கியசாமி என்பவரிடமிருந்து 1984 ஆம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி எம்.ஜி.ஆர் பெயரில் அந்த இல்லம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் உடல்நலம் குன்றிய எம்.ஜி.ஆர் மருத்துவத்திற்காக வெளிநாடு சென்ற நிலையில் இந்த இல்லத்திற்கு வராமலேயே மறைந்து விட்டார்.
சிதிலமடைந்த பங்களா
தற்போது இந்த கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த பங்களாவின் ஒரு பகுதியின் சுவர் உடைக்கப்பட்டு, அந்தப் பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி அந்த இல்லத்தை குப்பைத் தொட்டியாகவே மாற்றிவிட்டனர். சிலர் அந்த இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களையும் கட்டியுள்ளனர்.