தமிழகம் முழுவதும் இன்று மருத்துவ சேவை பாதிக்கப்படும் அபாயம்: மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்
சென்னையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அரசு, தனியார் மருத்துவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இன்று மருத்துவ சேவையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
Government Hospital
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் அரசு மருத்துவர் பாலாஜியை நோயாளியின் உறவினர் கத்தியால் குத்தினார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் மருத்துவர் செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருததுவர் மீதான தாக்குதலைக் கண்டித்து நவம்பர் 14ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
Government Hospital
அதன்படி அவசர சிகிச்சைகள் தவிர்த்து அனைத்துவிதமான மருத்துவ சேவைகளையும் மேற்கொள்வதில்லை என தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் புறநோயாளிகள் பிரிவு, அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள், பிற சிகிச்சைகள், மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகியவை தமிழகத்தில்உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகளில் நிறுத்தப்படும்.
Government Hospital
மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையிலும், குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பகல் 12 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Government Hospital
முன்னதாக மருத்துவர் சங்கங்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் எதிர்காலங்களில் நடைபெறாத வண்ணம் அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.