- Home
- Tamil Nadu News
- மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் பகுதியில் திருத்துரைபூண்டியில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தும். அதேபோன்று மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டியை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு பேருந்தின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். வலியால் அலறி துடிப்பதை பார்த்த அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டு ஐந்து ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கோட்டூர் பகுதியில் வளைவான பகுதியில் வந்த போது நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவில் பயணிகள் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 7 பயணிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதேபோல் கடந்த 31-ம் தேதி காரைக்குடி அருகே 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து பேருந்துகள் விபத்தில் சிக்குவது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

