- Home
- Tamil Nadu News
- இன்னும் 3 நாள் தான்! பூம்புகாரில் வெடிக்க காத்திருக்கும் பூகம்பம் - பதறும் பாமக சொந்தங்கள்
இன்னும் 3 நாள் தான்! பூம்புகாரில் வெடிக்க காத்திருக்கும் பூகம்பம் - பதறும் பாமக சொந்தங்கள்
பாமக சார்பில் வருகின்ற 10ம் தேதி பூம்புகாரில் வன்னிய மகளிர் பெருவிழா மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநாட்டின் போது கட்சிக்குள் பூகம்பம் வெடிக்கலாம் என கட்சியின் நலன் விரும்பிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பாமக அதிகார மோதல்
தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக பாட்டாளி மக்கள் கட்சி இருந்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் “மாற்றம் முன்னேற்றம் அன்புமணி” என்ற பெயரில் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்தப்பட்டார். ஆனால் தற்போது பாமக.வில் ஒரு அணி எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கவும், ஒரு அணி ஸ்டாலினை முதல்வராக்கவும் பிரசாரம் செய்ய தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. காரணம் பாமகவில் தற்போது தந்தை, மகன் இடையேயான அதிகார மோதல் தான்.
கட்சியின் நிறுவனரும் நான் தான், தலைவரும் நான் தான் என ராமதாஸ்ம், கட்சியின் தலைவர் நான் தான், கட்சி என் பக்கம் தான் என அன்புமணியும் தொடர்ந்து எதிர் எதிர் திசையில் பயணிக்கத் தொடங்கி உள்ளனர். இதனால் யார் பின்னார் போவது என்று தெரியாமல் நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.
அன்புமணி இல்லாத மாநாடு
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக.வில் அன்புமணி இல்லாமல் எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்தாத ராமதாஸ் தற்போது அவரைப் புறக்கணித்து முதல் முறையாக வன்னியர் மகளிர் மாநாட்டை நடத்த தயாராகி உள்ளார். இந்த மாநாட்டில் சுமார் 3 முதல் 4 லட்சம் பெண்கள் கலந்து கொள்ள வேண்டும் என தனது ஆதரவாளர்களுக்கு கட்டளையிட்டுள்ள ராமதாஸ், இதனை செய்து காட்டினால் தான் கட்சி, நிர்வாகிகள் என் பின்னால் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க முடியும் என்ற கணக்கில் இதை நடத்திக் காட்ட முடிவு செய்துள்ளார்.
இணைவது கடினம்
இந்த மாநாடு மட்டும் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டால் தந்தையையும், மகனையும் சேர்ப்பது மிகவும் சிரமமாகிவிடும் என பாமக.வின் விசுவாசிகள் பேசிக் கொள்கின்றனர். தந்தையும், மகனும் இணைந்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டாலும் கூட இருவருடனும் உடன் இருக்கும் ஒருசிலர் தொடர்ந்து கட்சிக்குள் புகைச்சல் ஏற்படுத்துவதையே குறியாக வைத்து செயல்படுவதாகக் கூறி வருத்தம் தெரிவிக்கின்றனர்.
அதிருப்தியில் தொண்டர்கள்
மாநாடு தொடர்பாக அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்தாலும், தற்போது வரை அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதே தெளிவாகிறது. கட்சியின் வளர்ச்சியை மனதில் கொண்டு தந்தையும், மகனும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் முரண்டு பிடிப்பது ஆதரவாளர்கள் மத்தியில் விரக்தியையும், சோர்வையும் ஏற்படுத்துகிறது என்பதே உண்மை.