- Home
- Tamil Nadu News
- ஆன்லைன் விளையாட்டு.! அரசின் விதிமுறைகள் செல்லும்- சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
ஆன்லைன் விளையாட்டு.! அரசின் விதிமுறைகள் செல்லும்- சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஆதார் இணைப்பு, நேரக் கட்டுப்பாடு விதித்த தமிழக அரசின் விதிமுறைகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து பல ஆயிரம் பேர் பரிதவித்து வருகிறார்கள். ஏராளமானவர்கள் கடன் வாங்கி சூதாட்டத்தில் பணத்தை இழந்து நடுத்தெருவில் தள்ளப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வும் நீடிக்கிறது. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிக்க வேண்டும் என்ற அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வந்தது. இதனையடுத்து தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் நீதிமன்றம் சட்டத்திற்கு தடை விதித்திருந்தது. இதனால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழக்கும் நிலை உருவானது.
இதனையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன் லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என நேர கட்டுப்பாடும் விதித்தும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனை எதிர்த்து ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கி, நேரக்கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகள் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.
ரம்மி, போக்கர் போன்ற பணம் வைத்து விளையாடும் விளையாட்டுக்கள் பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளதால், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் விதிகள் மத்திய அரசின் விதிகளுக்கு முரணாக இல்லை. நிபுணர் குழுவின் அறிக்கையில் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஏற்படுத்தும் எதிர்மறை பாதிப்புகளை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது இந்த ஒழுங்குமுறை விதிகள் உடனடி தேவையாகிறது எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவின் குறிப்பிட்டுள்ளனர்.
ஆன்லைன் விளையாட்டுக்களால் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் பொது சுகாதாரத்துடன் நேரடி தொடர்பு கொண்ட இந்த ஆன்லைன் விளையாட்டுகளை அரசு முறைப்படுத்த முடியும். மக்கள் தீவிரமான மன மற்றும் உடல் ரீதியிலான தாக்கங்களுக்கு உள்ளாகும் போது அரசு மௌனம் காக்க முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். தொழில் புரியும் உரிமையை மக்கள் வாழ்வுரிமையை பாதிக்கும் செயல்களை செய்ய அனுமதிக்க முடியாது என்ற நீதிபதிகள் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது எனக் கூறி நேரக்கட்டுப்பாடு, ஆதார் கட்டாயம் போன்றவற்றிற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.