அரசு பேருந்து கட்டணம் உயருகிறதா? அமைச்சர் சிவசங்கர் சொன்ன பரபரப்பு தகவல்!
தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வரும் நிலையில், கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு
தமிழகத்தில் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த அரசுக்கு உத்தரவிடக்கோரியும், ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்கும் வகையில், உயர்மட்டக் குழுவை நியமிக்கக் கோரியும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பான வழக்கில் தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டு 4 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டுமென கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு
இந்நிலையில், போக்குவரத்து துறை ஆணையரகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் பேருந்து கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க நிபுணர் குழு ஒன்றை நியமித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில், போக்குவரத்து ஆணையரின் தலைமையில் நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.
பொதுமக்கள் கருத்து கேட்பு
நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், டீசல், உதிரி பாகங்கள் மற்றும் இயக்கச் செலவுகளை பொறுத்து கட்டணத்தை உயர்த்தக் கூடிய குறியீட்டு முறையை மேற்கொள்வதற்காக முன்னேற்பாடு பணிகள் நடக்கிறது. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட இருக்கிறது. இதற்காக சென்னை, கிண்டியில் செயல்பட்டு வரும் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து அல்லது தபால் மூலமாக தங்கள் கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்
இந்நிலையில் அரசு பேருந்து கட்டணம் உயருமா என்பது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது. பேருந்து கட்டணம் உயர்வதாக வெளியாகும் செய்தி தவறானது. பேருந்து கட்டணம் உயராது என்பதால் தான் தனியார் பேருந்து சங்கத்தினர் நீதிமன்றம் சென்றுள்ளனர். நீதிமன்றம் மக்களிடம் கருத்தை கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுரை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், பொதுமக்களிடம் பஸ் கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இது அரசின் நிலைபாடு அல்ல; நீதிமன்றத்தில் அறிவுரையின்படி நடத்தப்படுகிறது. அரசை பொறுத்தவரையில் பொதுமக்கள் மீது இந்த சுமையை ஏற்றக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.