- Home
- Tamil Nadu News
- விஜய் டாப்.. முதல்வர் பதவியில் ஸ்டாலின்.. அடுத்து ஆட்சி அமைப்பது யார்? சர்வே கொடுத்த ஷாக்
விஜய் டாப்.. முதல்வர் பதவியில் ஸ்டாலின்.. அடுத்து ஆட்சி அமைப்பது யார்? சர்வே கொடுத்த ஷாக்
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய 2026 சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான வாக்குகளைப் பெறும் எனத் தெரியவந்துள்ளது. இந்த சர்வே குறித்த முழு விபரங்களை இங்கே பார்க்கலாம்.

2026 தேர்தல் சர்வே முடிவுகள்
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் கணிப்பு
தமிழக அரசியல் எப்போதும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளை மையமாகக் கொண்டே இருந்து வந்தாலும், இந்த முறை களம் மாறுபட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் தற்போது தேர்தல் அரங்கில் களமிறங்கியிருப்பதால் அரசியல் போட்டி சுவாரஸ்யமாகியுள்ளது. சினிமா ரசிகர்களை தாண்டி இளைஞர்களிடையே விஜய்க்கு கிடைக்கும் ஆதரவு இந்த தேர்தலில் எப்படி பிரதிபலிக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. அது அதிகமாக இருக்குமா? குறைவாக இருக்குமா? என்பது தான் அந்த எதிர்பார்ப்பு.
திமுக அதிமுக வாக்கு நிலை
இதற்கிடையில் கூட்டணி அமைப்புகளும் கவனத்தை ஈர்க்கின்றன. ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன. இன்னும் சில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மறுபுறம் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இருப்பதாக கூறப்பட்டாலும் தொகுதி ஒதுக்கீடு குறித்து இன்னும் தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை.
மு.க. ஸ்டாலின் முதல்வர் வாய்ப்பு
இந்நிலையில் லயோலா முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு எதிர்பாராத சில தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. நகர்ப்புற வாக்காளர்களிடம் திமுகவுக்கு சுமார் 24.77% ஆதரவு இருப்பதாகவும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 23.46% ஆதரவு கிடைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிமுக 20.55% ஆதரவுடன் அடுத்த இடத்தில் இருப்பதாகவும், நாம் தமிழர் கட்சி சுமார் 6.7% ஆதரவைப் பெறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் வாக்கு கணிப்பு
மொத்த வாக்கு சதவீதத்தைப் பார்க்கும்போது தமிழக வெற்றிக் கழகம் 19.20% ஆதரவுடன் இருப்பதாகவும், திமுக 17.7%, அதிமுக 15.32% எனப் பின்னால் இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கிறது. குறிப்பாக 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் விஜய் மீது அதிக விருப்பம் உள்ளது, ஆனால் அரசியல் அனுபவம் மற்றும் நிர்வாக திறன் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக பலர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சுமார் 1.40 கோடி வாக்காளர்கள் ஆதரவாக இருக்கக்கூடும் என்றும் இந்த கருத்துக்கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.

