- Home
- Tamil Nadu News
- விசுவாசம் ஜெயிக்காது..! மாற்று கட்சிக்கு சென்று பேரம் பேசுபவனுக்கே காலம்.. ஜெ., உதவியாளர் பரபரப்பு பதிவு..!
விசுவாசம் ஜெயிக்காது..! மாற்று கட்சிக்கு சென்று பேரம் பேசுபவனுக்கே காலம்.. ஜெ., உதவியாளர் பரபரப்பு பதிவு..!
Poongundran: உலகத்தை நினைத்து நான் சிரித்துக்கொண்டேன். தகுதியுள்ளவன் கூடத் தன் இடத்தைத் தக்கவைக்கத் தகுதியற்றவர்களுக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது என பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்
ஒரு கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார நினைப்பவனையும், தலைமைக்கு விசுவாசமாக அமைதியாக இருப்பவனையும் இந்த அரசியல் உலகம் கொண்டாட மறுக்கிறது என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் முகநூல் பக்கத்தில் பரபரப்பு பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அரசியல் களத்தில் பல ஆண்டுகளைக் கடந்த எனக்கு ஒரு கசப்பான உண்மை புரிந்திருக்கிறது. இங்கே நல்லவர்களை யாருக்கும் பிடிப்பதில்லை. நேர்மையாக இருப்பவர்களை 'இளிச்சவாயர்கள்' என்றும், தந்திரமாக இருப்பவர்களை 'கெட்டிக்காரர்கள்' என்றும் போற்றும் ஒரு விசித்திரமான உலகமாக இது மாறிவிட்டது. ஒரு கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார நினைப்பவனையும், தலைமைக்கு விசுவாசமாக அமைதியாக இருப்பவனையும் இந்த அரசியல் உலகம் கொண்டாட மறுக்கிறது. ஆனால், அதே நேரத்தில் ஒருவன் மாற்றுக்கட்சிக்குச் சென்று, அங்கிருந்து கொண்டு தன் தாய் கழகத்தை வசைபாடிவிட்டு, பிறகு ஒரு பெரிய பதவியைப் பேரம் பேசிப் பெற்றுக்கொண்டு மீண்டும் உள்ளே வந்தால், அவனைத் தான் இந்த இயக்கங்கள் கொண்டாடுகின்றன. வேடிக்கை என்னவென்றால், மக்களும் அத்தகையவர்களுக்கே வாக்களித்து வெற்றி பெற வைக்கிறார்கள்.
ஜால்ரா அடிப்பவர்கள்
தலைமையை உண்மையாக நேசிப்பவர்களைத் தலைவர்கள் கண்டுகொள்வதில்லை. மாறாக, ஜால்ரா அடிப்பவர்களையும், துதி பாடுபவர்களையும் தான் அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். என் அனுபவத்திலிருந்து நான் சொல்வது இதுதான், "அமைதியாக இருப்பவனை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளாது." நீங்கள் அரசியலில் பிழைக்க வேண்டும் என்றால் பேச வேண்டும். ஏனெனில், பேசுபவன் ஆபத்தானவன் என்று கருதி, அவனைப் பேசாமல் வைப்பதற்காகவாவது அரவணைத்துக் கொள்வார்கள். ஆனால், "நல்லவர்களால் நமக்கு எந்தப் பாதிப்பும் வராது" என்று அவர்களைக் கண்டு கொள்ளாமல் ஓரம் கட்டிவிடுவார்கள்.
அதிர வைத்த பதில்
ஒருமுறை ஒரு இடைத்தேர்தல். ஒரு வேட்பாளர் போட்டியிட ஆசைப்பட்டார். "அம்மா அவருக்குத்தான் சீட்" என்று என்னிடம் சொல்லிவிட்டார்கள். ஆனால் அந்த வேட்பாளரோ, தனக்குச் சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பலருக்கும் உதவி செய்து கொண்டிருந்தார். இதை தெரிந்து கொண்ட நான் அவரிடம், "ஐயா, உங்களுக்குத்தான் சீட் என்று உறுதியாகிவிட்டது. ஏன் தேவையில்லாமல் பலருக்கும் உதவி செய்து ஏமாந்து போகிறீர்கள்?" என்று சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னை அதிர வைத்தது, "பூங்குன்றன் சார், நீங்கள் ரொம்ப நல்லவர். உங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரவம் செய்ய மாட்டீர்கள்.
விசுவாசம்' ஜெயிக்கும்
ஆனால் மற்றவர்கள் அப்படி இல்லை. நான் அவர்களை சரிசெய்யவில்லை என்றால், அவர்கள் ஏதாவது ஒரு வழியில் சென்று என்னைப் பற்றித் தலைமையிடம் குறை சொல்லி என் வாய்ப்பைத் தடுத்துவிடுவார்கள். அந்தப் பயத்தால்தான் நான் இவர்களுக்குச் செய்து கொண்டிருக்கிறேன்." இதைக்கேட்டு இந்த உலகத்தை நினைத்து நான் சிரித்துக்கொண்டேன். தகுதியுள்ளவன் கூடத் தன் இடத்தைத் தக்கவைக்கத் தகுதியற்றவர்களுக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது.
இந்த கலிகால அரசியலில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், சில எதார்த்தங்களைச் செய்தே ஆகவேண்டும். உங்கள் இருப்பை சத்தமாகப் பதிவு செய்யுங்கள். பணம் சம்பாதிப்பதைக் குறிக்கோளாகக் கொள்ளுங்கள். அந்தப் பணத்தை வைத்து அரசியலில் ஒரு கலக்கு கலக்குங்கள். அதுதான் இன்றைய எதார்த்தம். இதையெல்லாம் தாண்டி 'விசுவாசம்' ஜெயிக்கும். ஆனால் அது ஜெயிக்க நீண்ட காலம் எடுக்கும். அதுவரை பொறுமையோடு காத்திருக்கும் வலிமை உங்களிடம் இருக்க வேண்டும். அந்தப் பொறுமை இருந்தால் மட்டுமே நீங்கள் உண்மையான விசுவாசியாக நிலைத்து நிற்க முடியும் என தெரிவித்துள்ளார்.

