ஒரே வாரத்தில் கொத்தாக வரும் 3 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கு ஜாலி தான்
ஜூலை மாதத்தில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வார விடுமுறை நாட்களைத் தவிர கூடுதல் விடுமுறை நாட்கள் இல்லை என்றாலும், ஜூலை 23, 24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை
இயந்திர வாழ்க்கைக்கு ஈடு கொடுத்து ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு நாள் விடுமுறை கிடைத்தால் சந்தோஷத்தில் துள்ளி குதிப்பார்கள். விடுமுறை நாட்களில் உறவினர்கள் வீட்டிற்கோ, சுற்றுலாவிற்கோ செல்ல தொடங்கிவிடுவார்கள். அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு வார விடுமுறை நாட்களை தவிர கூடுதல் விடுமுறை நாட்கள் கிடைக்குமா என காலண்டரில் தேடி தேடி பார்த்தனர். ஆனால், எந்த ஒரு விடுமுறை தினமும் வரவில்லை. மொகரம் பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமை வந்தது. இதனால் மாணவர்கள் சோகத்தில் இருந்தனர்.
ஒரே வாரத்தில் 3 நாள் விடுமுறை
இந்த நிலையில் தான் ஜூலை மாதத்தில் வார விடுமுறையே தவிர வேறு விடுமுறை நாட்கள் இல்லையென்றறாலும் உள்ளூர் விடுமுறையானது ஒரே வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை கிடைப்பது மாணவர்களை மட்டுமல்ல அரசு ஊழியர்களையும் கொண்டாட வைத்துள்ளது. அந்த வகையில் ஜூலை 23, 24 மற்றும் 28 ஆகிய நாட்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால் சுற்றுலா செல்ல திட்டமிட்டவர்கள் இந்த நாட்களை பயன்படுத்திக்கொள்ளலாம். அதிலும் ஜூலை 28ஆம் தேதி திங்கட் கிழமை வருகிறது. இதனால் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை என தொடர் விடுமுறையானது கிடைக்கவுள்ளது. இதனால் மாணவர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
ஜூலை 23 அரியலூர் விடுமுறை
எனவே ஜூலை 23, 24 மற்றும் 28ஆம் தேதிகளில் எந்த எந்த மாவட்டங்களில் விடுமுறை என்பதை தற்போது பார்க்கலாம், வருகிற புதன்கிழமை அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழா இப்பகுதி மக்களால் கொண்டாடப்படவுள்ளது.
இந்த விழாவில் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள். இதனிடையே திருவாதிரை விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் ஜூலை 23ஆம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடுகட்டும் வகையில் ஜூலை 26 ஆம் தேதி சனிக்கிழமை அன்று முழு வேலை நாள் என மாவட்ட ஆட்சியர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 24 கன்னியாகுமரி விடுமுறை
அடுத்ததாக ஜூலை 24ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்கு திதி, பிண்டம், தர்ப்பணம் போன்ற பூஜைகள் செய்யப்படும். எனவே கன்னியாகுமரியில் ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையையொட்டி கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 9ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் எனவும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 28 செங்கல்பட்டு விடுமுறை
அடுத்தாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜூலை 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூலை 28ஆம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.