- Home
- Tamil Nadu News
- திமுக மூத்த அமைச்சரை குப்பை என விமர்சித்த கார்த்தி சிதம்பரம்.. பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரே..
திமுக மூத்த அமைச்சரை குப்பை என விமர்சித்த கார்த்தி சிதம்பரம்.. பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரே..
பணக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கே காங்கிரஸ் தலைவர்கள் வருவார்கள் என்ற அமைச்சர் ஐ.பெரியசாமியின் கருத்தை காங்கிரஸ் எம்.பி. குப்பை என விமர்சித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒன்றிய செயலாளர் இல்ல விழாவில் துணைமுதல்வர்
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் பகுதியில் நடைபெற்ற ஒன்றிய செயலாளர் வீராச்சாமியின் இல்ல திருமண விழாவில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர் பெரியசாமி, “சுழன்று சுழன்று அனைத்துப் பணிகளையும் செய்து கொண்டிருந்தாலும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டது பெருமை என சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இது தான் திமுக..
தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிலேயே எளிமையான முதல்வர், மக்களோடு மக்களாக கலந்து பணியாற்றும் துணைமுதல்வரை நம்மால் பார்க்கவே முடியாது. இது தான் திராவிடர் முன்னேற்ற கழகம். சாமானியர்களுக்கு மதிப்பளிப்பது மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்துடன் இணைந்து இருக்கக் கூடிய ஒரே இயக்கம் திமுக என்பதை யாரும் மறுக்க முடியாது.
பணக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு மட்டும் வரும் காங். தலைவர்கள்
விழாவில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பங்கேற்றிருந்த நிலையில், காங்கிரஸில் முக்கிய தலைவர்கள் பணக்காரர் வீட்டு நிகழ்ச்சிகளுக்க மட்டுமே வருவார்கள். அவர்களை நான் குறைத்து சொல்லவில்லை. திமுகவை பொறுத்தவரை சாமானயர்களை உயர்வாக மதிப்பிடக்கூடிய இயக்கம். பணத்தாலோ, செல்வத்தாலோ நாம் உயரவில்லை. திமுகவால் தான் நாம் உயர்ந்துள்ளோம், அமைச்சராக இருக்கிறோம். திமுகவுக்கு இணையாக எந்த இயக்கமும் வரமுடியாது” என்று தெரிவித்தார்.
குப்பை
இந்நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் கருத்தைப் பகிர்ந்துள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், “குப்பை” என்று பதிவிட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் தான் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் கை நம்மை விட்டு செல்லாது என்று கூட்டணி தொடர்பாக தெரிவித்திருந்தார். ஆனால் அதற்குள் தலைவர்கள் இதுபோன்ற கருத்து மோதலில் ஈடுபடுவது தொண்டர்களின் ஒற்றுமையை பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.