திமுகவிடம் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி சீட் கேட்டதா? என்பது குறித்து கார்த்தி சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது திமுக காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்குமா என்பது குறித்து கேட்டதற்கு, ''மாநிலங்களவை சீட்டுக்காக காங்கிரஸ் சார்பில் திமுகவிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலின்போது எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை. ஆகவே திமுகவுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது'' என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
ஆர்பிஐயை விமர்சிதத கார்த்தி சிதம்பரம்
தொடர்ந்து ஆர்பிஐ கொண்டு வந்துள்ள நகைக்கடன் கட்டுப்பாடு குறித்து பேசிய அவர், ''முதலில் நகை கடனில் அசலை முழுமையாக கட்ட வேண்டும் என்றும் அடுத்த நாள் மறுபடியும் அடகு வைக்கலாம் என்றும் கூறுகிறார்கள். அதே நேரத்தில் நகைக்கான ரசீது கட்டாயம் என்கிறார்கள். இது மக்களின் வாழ்க்கைச் சூழ்நிலையை புரிந்து கொள்ளாதவர்கள் உருவாக்கும் அபத்தமான விதிமுறைகள். மத்திய ஆட்சியாளர்கள் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை எவ்வாறு நடைபெறுகிறது? என்ற விஷயமே தெரியாமல் இந்த விதிமுறையை கொண்டு வந்துள்ளனர். ஆர்பிஐ இந்த விதிகளை தளர்த்த வேண்டும்'' என்று கூறினார்.
பாமக உட்கட்சி பிரச்சனை குறித்து பேச்சு
இதனைத் தொடர்ந்து பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்படுள்ள மோதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், ''பாமகவில் நடப்பது கொல்கைரீதியான பிளவல்ல. இது குடும்பப் பிரச்சனை. அதற்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை" என்றார். மேலும் திருக்குறள் ஆன்மீகம் சார்ந்தது என்ற ஆளுநர் ரவி கருத்து குறித்து பேசிய அவர், ''திருக்குறளில் ஆன்மீகம் என்ற கருத்து இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அவர் சொல்வதனை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. வம்பு சண்டைக்குத் தூண்டக்கூடிய ஆளுநராக அவரைப் பார்க்கிறேன்” என்றார்.
பாஜக-அதிமுக கூட்டணி குறித்து பேச்சு
தேர்தல் செலவுகள் குறித்த கேள்விக்கு,“மோடி அரசு பணத்தை ஒழித்து ஆன்லைன் பரிவர்த்தனையை ஊக்குவித்துவிட்டது. ஆனால் தமிழக அரசியலில் செலவு அதிகம் என்பது உண்மை. எந்தக் கட்சியும் இதில் விதிவிலக்கு அல்ல,” என்றார். பாஜக மற்றும் அதிமுக கூட்டணியைக் குறித்து, ''அண்ணாமலை தலைமையிலான பாஜகவுக்கு தரையில் ஆதரவு இல்லை. IT விங் ஒருபோதும் காண்பித்த சுறுசுறுப்பு இப்போது இல்லை. அதிமுக ஒரு சாதாரண கட்சி அல்ல; இரட்டை இலை சின்னத்திற்கே தனி வாக்கு வங்கி உள்ளது. அடிமட்ட தொண்டர்கள் பாஜகவுடன் கூட்டணி வைப்பதை விரும்பவில்லை,” என்றார்.
காமராஜரை விஜய்யுடன் ஒப்பிடுவதா?
தமிழ்-கன்னட மொழி விவகாரம் குறித்தும், “எல்லா மொழிகளுக்கும் தனித்தன்மை, காவியம், இதிகாசம் உண்டு. எந்த மொழி எங்கிருந்து வந்தது என்பது ஆராய்ச்சி விஷயம். அதில் நான் இறங்க விரும்பவில்லை,” என்றார். விஜய்க்கு ‘இளைய காமராஜர்’ எனப் பட்டம் சூட்டப்படுவது குறித்து, காமராஜரின் பெருமை, தகுதி பற்றி சரியான புரிதல் இல்லாதவர்களே இப்படி நினைக்கிறார்கள். அவர் எளிதில் ஒப்பிடக்கூடிய தலைவர் அல்ல'' என்று தெரிவித்தார்.
