- Home
- Tamil Nadu News
- இந்த வேலையை வேற எங்கனா வச்சுக்கோங்க! நீதிமன்றத்தையே பிளாக்மெயில் செய்வீங்களா! சவுக்கு சங்கரை கதறவிட்ட நீதிபதி!
இந்த வேலையை வேற எங்கனா வச்சுக்கோங்க! நீதிமன்றத்தையே பிளாக்மெயில் செய்வீங்களா! சவுக்கு சங்கரை கதறவிட்ட நீதிபதி!
யூடியூபர் சவுக்கு சங்கரின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தொடர்ந்த வழக்கில், வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற சங்கர் தரப்பு கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். நீதிமன்றத்தை ப்ளாக் மெயில் செய்ய வேண்டாம் என எச்சரித்தார்.

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். ஆளும் திமுக அரசுக்கு எதிரான விமர்சனம் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். அவ்வப்போது கைது செய்யப்படுவதும் ஜாமீனில் வெளியே வருவதுமாக இருந்து வருகிறார். இந்நிலையில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் 2025ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். எனது மகனுக்கு இருதய நோயும், நீரழிவு நோயும் உள்ளது. ஆகையால் சிறப்பு மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆகையால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 27ம் தேதி நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதாவது மார்ச் 25ம் தேதி வரை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்றம் விதித்த ஜாமீன் நிபந்தனைகளை சவுக்கு சங்கர் மீறியுள்ளார். தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு கடந்த 8ம் தேதி நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்று சாட்சிகளை மிரட்டலாமா? என சவுக்கு சங்கர் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், சவுக்கு சங்கருக்கு எதிரான அனைத்து ஆவணங்களையும் காவல்துறை சேகரித்து வைக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது மட்டுமல்லாமல் இந்த மனுவுக்கு சங்கரின் தாயார் கமலா பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை இந்த அமர்வு விசாரிக்க கூடாது. வேறு நீதிபதிகள் விசாரணைக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் கடுப்பான நீதிபதி வேல்முருகன் நீதிபதிகளை தேர்ந்தெடுத்து வழக்கை நடத்த முடியாது. இது போன்ற மனுக்களை விசாரிக்கு ஏற்க மாட்டேன் என தெரிவித்தார்.
மேலும் நீதிமன்றத்தையும் பிளாக் மெயில் செய்ய முயற்சிக்க வேண்டாம். அது பலிக்காது, நாங்கள் இந்த வழக்கில் இருந்து விலக மாட்டோம். இப்படிப்பட்ட கோரிக்கையை நாங்கள் ஒரு போதும் ஏற்றதில்லை. தேவைபட்டால் சவுக்கு சங்கர் தலைமை நீதிபதியிடம் முறையிட்டு நிவாரணத்தை கோரலாம். இந்த அமர்வின் மீது நம்பிக்கை இல்லை என சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தாலும், அவருடைய ஜாமீனை ரத்து செய்ய கோரும் வழக்கிலிருந்து நாங்கள் விலக போவதில்லை எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், சவுக்கு சங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இன்று பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

