- Home
- Tamil Nadu News
- ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!
ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) - காங்கிரஸ் கூட்டணி முறிந்து, ஹேமந்த் சோரன் பாஜகவுடன் புதிய கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜார்க்கண்டில் ஆட்சி மாற்றம்?
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) – காங்கிரஸ் கூட்டணி முறிந்து, ஜே.எம்.எம். பாஜக (BJP) கூட்டணியில் இணைய இருப்பதாக கடந்த சில வாரங்களாக வெளிவந்த செய்திகள் தற்போது தீவிரமடைந்து வருகின்றன.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கட்சி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை (JMM) தனது கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டது. இதன் காரணமாக, ஹேமந்த் சோரன் பீகாரில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கோபத்துடன் வெளியேறினார்.
இந்தக் கோபத்தின் விளைவாகவே, பாஜக – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி பற்றிய செய்திகளை ஜே.எம்.எம். தரப்பே பரப்ப ஆரம்பித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக தலைவர்களைச் சந்தித்த ஹேமந்த் சோரன்
தற்போது, 'தைனிக் ஜாக்ரன்' செய்தி நிறுவனம் இந்தக் கூட்டணி குறித்த தகவலை உறுதி செய்துள்ளது. ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவி கல்பனா சோரன் இருவரும் டெல்லியில் பாஜக தலைமையைச் சந்தித்துப் பேசியுள்ளதாக அந்தச் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒருவேளை ஜார்க்கண்டில் கூட்டணி மாற்றம் ஏற்பட்டு, பாஜக – ஜே.எம்.எம். கூட்டணி ஆட்சி அமைந்தால் அது பாஜக-வுக்கு மிகப்பெரிய சாதகமாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
பழங்குடி மக்கள் ஆதரவு
முன்பு பாஜக-வுக்குச் சாதகமாக இருந்த ஜார்க்கண்டில், ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட சம்பவம் பாஜக-வுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த கைது நடவடிக்கையால் பழங்குடி மக்களிடையே பாஜக-வுக்கு ஆதரவு குறைந்தது.
மேலும், புதிதாகத் தொடங்கப்பட்ட டைகர் ஜெய்ராம் மஹதோவின் ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி, பாஜக-வின் முக்கிய ஓபிசி வாக்குகளான குர்மி-குஷாவாஹா வாக்குகளைப் பிரித்துவிட்டது. இதனால் தற்போது ஜார்க்கண்டில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்ற நிலை உள்ளது.
இந்தச் சூழலில், ஜே.எம்.எம். உடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியில் அமர்ந்தால், பழங்குடி மக்களிடையே பாஜக-வுக்கு உண்டான கோபம் குறைந்து, அடுத்த தேர்தலில் பாஜக-வுக்கு ஜார்க்கண்டில் ஒரு அரசியல் எழுச்சி கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.
தேசிய அளவில் பலவீனம்
இதைவிட முக்கியமானது என்னவென்றால், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் ஒரு முக்கிய மாநிலம் பாஜக கூட்டணிக்கு வந்துவிட்டால், தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி மேலும் பலவீனமடைந்துவிடும்.
ஹேமந்த் சோரன் சில ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸைக் கழற்றிவிட்டு பாஜக-வில் இணையக் காத்திருந்தார். ஆனால், அப்போது பாஜக அதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இப்போது பாஜக-வே ஹேமந்த் சோரனிடம் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்த ஆரம்பித்து இருப்பது காலத்தின் கட்டாயம் என்றே கூற வேண்டும்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியிருப்பதன் மூலம், மிக விரைவில் ஜார்க்கண்டில் அரசியல் மாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

