23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதுடெல்லி வந்துள்ளார். பிரதமர் மோடியுடன் அவர் நடத்தும் பேச்சுவார்த்தையில், பல துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சற்று நேரத்திற்கு முன் அரசுமுறைப் பயணமாகப் புதுடெல்லிக்கு வந்து சேர்ந்தார்.
தனிவிமானத்தில் டெல்லி வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். அதிபர் புடின் நாளை பிரதமர் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
2022 ஆம் ஆண்டு உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் தொடங்கிய பிறகு புடின் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
வெள்ளிக்கிழமை, மகாத்மா காந்தி நினைவிடத்தில் புடின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முறையான பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, பிரதமர் மோடியும் ஜனாதிபதி புடினும் ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிடுவார்கள்.
முக்கிய ஒப்பந்தங்கள்
இந்தச் சந்திப்பின்போது இரு நாட்டுத் தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்துத் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார்கள்.
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வர்த்தகம், பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் மற்றும் ஊடகத் துறைகள் உட்படப் பல துறைகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு, எரிசக்தி கூட்டுறவு
இந்தியாவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக ரஷ்யா திகழும் நிலையில், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். இந்தியா ஒப்பந்தம் செய்துள்ள எஸ்-400 (S-400 Triumf) வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை விரைந்து வழங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா தற்போது இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையராக உள்ள நிலையில், எரிசக்தி பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படும்.
இந்த உச்சி மாநாடு இரு நாடுகளின் சிறப்பு வாய்ந்த மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தொலைநோக்கு பார்வையை அமைக்க உதவும்.
அதிபர் புடினுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று இரவு விருந்து அளிக்கிறார்.


