- Home
- Tamil Nadu News
- தலைநகரில் இரவில் அடிச்சு ஊத்திய கனமழை! ரெடியா சென்னை? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய அப்டேட்!
தலைநகரில் இரவில் அடிச்சு ஊத்திய கனமழை! ரெடியா சென்னை? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய அப்டேட்!
Tamil Nadu Weatherman: தென்மேற்கு பருவமழையைத் தொடர்ந்து, தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் கோவை, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாகவே சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பகலில் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் இரவு மற்றும் அதிகாலையில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கனமழை
அதேபோல் நேற்று இரவு முதல் சென்னையில் நுங்கம்பாக்கம், போரூர், ராமாபுரம், கோடம்பாக்கம், கோயம்பேடு, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், நசரத்பேட்டை, திருமழிசை, மாங்காடு, குன்றத்தூர், மதுரவாயல் மற்றும் விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதேபோல் திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
இதனிடையே தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
6 மாவட்டங்களில் மழை
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது நேற்று வெளியிட்ட எக்ஸ் தளத்தில்: ரெடியா சென்னை? இடியுடன் கூடிய மழை மேகங்களின் நுழைவாயிலாகக் கருதப்படும் ஆவடியை நெருங்கியுள்ளது. சென்னையின் பிற பகுதிகளுக்கும் மழை வரவுள்ளதற்கான பொதுவான அறிகுறிதான் இது! அடுத்தபடியாக அம்பத்தூர் பகுதியிலும், அதைத் தொடர்ந்து சென்னையின் பிற இடங்களிலும் தீவிரமான, ஆனால் குறுகிய நேரம் மட்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த இரண்டு நாட்களைப் போல இது ஒரு பெரிய மழை அமைப்பு அல்ல. இதனால் சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்யாமல் கூட போகலாம் என்று தெரிவித்துள்ளார்.