- Home
- Tamil Nadu News
- கொட்டித்தீர்த்த கனமழை! ஊட்டி போல் மாறிய சென்னை! இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
கொட்டித்தீர்த்த கனமழை! ஊட்டி போல் மாறிய சென்னை! இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. நகரின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. நெற்குன்றத்தில் அதிகபட்சமாக 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்கினர். இந்நிலையில் கடந்த சில சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலையில் வெயில் சுட்டெரிப்பதும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்குவதுமாக இருந்து வருகிறது.
சென்னையில் வெளுத்து வாங்கிய மழை
இந்நிலையில் நேற்று மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. நகரின் முக்கிய பகுதிகளான அண்ணாசாலை, பாரிமுனை, சென்ட்ரல், மெரினா, அண்ணாநகர், வண்ணாரப்பேட்டை, இராயபுரம், புதுவண்ணாரப்பேட்டை, போரூர் ராமாபுரம், திருவெற்றியூர், எண்ணூர், உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மழை காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எறியவிட்டு சென்றன. நேற்று விட்டு விட்டு மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
நெற்குன்றத்தில் 17 செ.மீ மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெற்குன்றத்தில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மணலியில் 14 செ.மீ, கொரட்டூரில் 11 செ.மீ, வளசரவாக்கத்தில் 9 செ.மீ, அயப்பாக்கம் மற்றும் அம்பத்தூரில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இன்றைய சென்னை வானிலை நிலவரம்
அதேபோல் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.