- Home
- Tamil Nadu News
- #BREAKING: விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
#BREAKING: விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து வடக்கு இலங்கை வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை
தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை. திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
கிரிவலம் சென்ற பக்தர்கள் அவதி
அதன்படி நேற்று இரவு முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று திருவண்ணாமலை கிரிவலம் சென்ற லட்சக்கணக்கான பக்தர்கள் கனமழையால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
வானிலை மையம் எச்சரிக்கை
அதேபோல் இன்றும் வட தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் மழை முன்னெச்சரிக்கை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று சனிக்கிழமை என்பதால் ஏற்கனவே அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.