தமிழக அரசு, தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்து, மாநிலத்திற்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினரால் வடிவமைக்கப்பட்ட இந்தக் கொள்கை, பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் உள்ளடக்கியது.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த 2022-ம் ஆண்டு ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் கேட்டறிந்து கல்விக் கொள்கையை இந்த குழுவினர் உருவாக்கினர். மாநில கல்விக் கொள்கைக்கான 650 பக்க வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் தயாரானது. 2024 ஜூலை 1-ம் தேதி தமிழக அரசிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

மாநில கல்விக் கொள்கை

இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நுாற்றாண்டு நூலகத்தில் இன்று வெளியிட்டார். அதில், இந்த ஆண்டு முதலே 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு எனவும் 8ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி போன்ற விவரங்கள் இடம் பெற்றிருந்தன.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

அதில் மாநில கல்விக்கொள்கையின்படி, தமிழகத்தில் 11-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி உறுதி செய்யப்படும். இருமொழி கொள்கையே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷ்

இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி செய்தது மட்டுமல்லாமல் நடப்பாண்டு முதலே 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் மாநிலக் கொள்கை இந்த ஆண்டு முதலே அமலுக்கு வருகிறது. 8ம் வகுப்பு வரை ஆல்-பாஸ் திட்டம் தொடரும், மாணவர்களின் மன அழுத்த‌த்தை குறைக்க 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்று விளக்கம் அளித்துள்ளார்.

பாராட்டு விழாக்களை நடத்துகிறார்களா?

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்; School Students-யும், இளைஞர்களையும் பார்த்தாலே ஒரு புதிய Energy வந்துவிடும். உங்கள் வயதில் Enjoy-யும் செய்யலாம்... நன்றாக படித்து, சாதித்து, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் மாறலாம்! அப்படி, எடுத்துக்காட்டாக மாறியிருக்கக்கூடிய உங்களை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். மாணவர்களை சந்திக்கின்ற ஒவ்வொரு முறையும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். கொரோனா காலத்தில் நாம் ஆட்சிக்கு வந்தபோதும், அந்தப் பெருந்தொற்றால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்று “இல்லம் தேடிக் கல்வி” போன்ற முன்னெடுப்புகளை எடுத்து, கல்வி வழங்கினோம். நாங்கள் உங்கள் மீது வைத்த நம்பிக்கைக்குப் பலன்தான், உங்களின் சாதனைகள். அதனால்தான், பள்ளிக்கல்வி வரலாற்றில் இதை Special-ஆன விழா என்று சொல்கிறோம்! வேறு எந்த மாநிலத்திலும், தங்களின் மாணவர்களுக்கு இப்படிப்பட்ட பாராட்டு விழாக்களை நடத்துகிறார்களா? எனக்குத் தெரிந்து இல்லை.

இருமொழிக் கொள்கைதான் நம்முடைய உறுதியான கொள்கை

மாணவர்கள் படித்து பெரிய ஆளாக வருவதை பார்த்து மகிழ்ச்சி அடைவது, ஒரு தாயின் உணர்வு! இந்த விழாவும், திராவிட மாடல் அரசின் தாய்மை உணர்வுதான். இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி அடைந்த அரசுப் பள்ளி மாணவர்களில், உயர்கல்வியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 75 விழுக்காடு! இந்த நம்பரை அடுத்த ஆண்டு இன்னும் அதிகமாக Beat செய்யக்கூடிய அளவுக்கு வரவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். நம்முடைய இலக்கு 100 சதவீதம். உயர்கல்வியில் சேர்ந்தார்கள் என்பது தான். இந்த இலக்கை எட்ட உங்களை போன்ற மாணவர்கள்தான் உதவ வேண்டும். உங்கள் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என்று யாராவது College சேரவில்லை என்றால், எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் படிப்பை கைவிட்டுவிடக் கூடாது என்று சொல்லி, அவர்களை நீங்கள் படிப்பைத் தொடர வைக்க வேண்டும். 

இந்த கல்விக் கொள்கை மூலமாக, படித்து, மனப்பாடம் செய்வதைவிட சிந்தித்து, கேள்வி கேட்கின்ற மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான ஆற்றலை வழங்க இருக்கிறோம். தொழில்நுட்ப மனம் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம்! படிப்பவர்களாக மட்டுமல்ல, படைப்பாற்றல் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம்! கல்வியோடு உடற்பயிற்சியும் இணைக்கப்படும்! தாய்மொழி தமிழ் நம்முடைய அடையாளமாக - பெருமிதமாக இருக்கும்! முக்கியமாக தமிழும் - ஆங்கிலமும் என்கிற இருமொழிக் கொள்கைதான் நம்முடைய உறுதியான கொள்கையாக இருக்கும்! மீண்டும் சொல்கிறேன். இருமொழிக் கொள்கைதான் நம்முடைய உறுதியான கொள்கை என தெரிவித்துள்ளார்.