- Home
- Tamil Nadu News
- இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் ஊத்தப்போகும் கனமழை.. ஓரிரு இடங்களில் ஆலங்கட்டி! டெல்டா வெதர்மேன்
இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் ஊத்தப்போகும் கனமழை.. ஓரிரு இடங்களில் ஆலங்கட்டி! டெல்டா வெதர்மேன்
தமிழ்நாட்டில் பல மாதங்களாக வாட்டி வதைத்த கடும் வெயிலுக்குப் பிறகு, வேலூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்தது.

தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் பிப்ரவரி மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. பின்னர் மார்ச் மாதத்தில் உக்கிரமானதை அடுத்து கோடை வெயில் தொடங்கிய விட்டதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இதனிடையே இந்த ஆண்டு எலினோ உருவாகக்கூடிய ஆண்டாக இருப்பதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் வேலூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரி தாண்டி வெயில் வாட்டி வந்தது. இதன் காரணமாக இரவு நேரத்தில் அனல் காற்று வீசுவதால் பலர் தூக்கமின்றி புழுக்கத்தில் அவதிப்பட்டு வந்தனர். கோடை மழை பெய்து வெப்பத்தை தணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
நேற்று தமிழ்நாட்டில் வேலூர், திருச்சி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட 4 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அனலின் தாக்கத்தால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் பலர் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கினர்.
இந்நிலையில் நேற்று மாலை வேலூர், விழுப்புரம், அரியலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கோடை வெயிலால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களுக்கு இந்த திடீர் மழையால் அனலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் சற்றே மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்புள்ளது என ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே இடி, மின்னலுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மவவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.

