- Home
- Tamil Nadu News
- 155 ஆண்டு கால வரலாற்றில்.. ஜனவரி 9 முதல் 12 வரை.. விவசாயிகளுக்கு அலர்ட் கொடுத்த டெல்டா வெதர்மேன்
155 ஆண்டு கால வரலாற்றில்.. ஜனவரி 9 முதல் 12 வரை.. விவசாயிகளுக்கு அலர்ட் கொடுத்த டெல்டா வெதர்மேன்
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக, ஜனவரி 9 முதல் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 5ம் தேதி மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது வலுப்பெற்றுள்ளது.
தற்போது சென்னைக்கு 1,270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஜனவரி 9ம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய உள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்: தெற்கு வங்ககடலில் நிலவக்கூடிய தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். கடந்த 155 ஆண்டு கால வரலாற்றில் ஜனவரி மாதத்தில் உருவாகும் 21 வது காற்றழுத்த தாழ்வு மண்டலம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைவதால் ஜனவரி 9 முதல் 12 வரை வேளாண் பணிகளை ஒத்திவைக்க வேண்டுகோள். ஜனவரி 8ம் தேதி இரவுக்குள் தற்போதைய அறுவடையை முடித்து தானியங்களை பாதுக்காப்பாக பத்திரப்படுத்துமாறு ஹேமச்சந்தர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

