- Home
- Tamil Nadu News
- ஜனவரி 9, 10 மிக கன மழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் முக்கிய அப்டேட்
ஜனவரி 9, 10 மிக கன மழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் முக்கிய அப்டேட்
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய உள்ளது. அதாவது ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது இன்று காலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும். பிறகு, மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நகரக்கூடும்.
வறண்ட வானிலை
இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதேபோல் நாளை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழகத்தில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை
ஜனவரி 8
கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜனவரி 9
கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜனவரி 10
கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜனவரி 11
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

