- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் நேற்று இரவு வெளுத்து வாங்கிய கனமழை! இன்று 13 மாவட்டங்களில் சம்பவம் காத்திருக்காம்!
தமிழகத்தில் நேற்று இரவு வெளுத்து வாங்கிய கனமழை! இன்று 13 மாவட்டங்களில் சம்பவம் காத்திருக்காம்!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தை குளிர்வித்த கோடை மழை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்ததால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர். இதனிடையே மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தென்காசி, நீலகிரி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை
அதேபோல் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிமை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணிநேரத்தில் 7 மாவட்டங்களில் மழை
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன்
இதனிடையே கோடைக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்ததாகவும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் வட தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.