- Home
- Tamil Nadu News
- TN Heavy Rain: தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை! லிஸ்டில் உங்க மாவட்டம் இருக்கா பாருங்க?
TN Heavy Rain: தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை! லிஸ்டில் உங்க மாவட்டம் இருக்கா பாருங்க?
Tamilnadu Rain: தமிழகத்தில் கோடை வெயில் தணிந்து, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் துவங்கக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக வேலூர், கரூர், மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் வரும் நாட்களில் மழை மற்றும் வெயில் நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் துவங்கக்கூடும். நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 08.30 மணியளவிலும் அதே பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
அதேபோல் நாளை விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும்.
மே 17ம் தேதி திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

