- Home
- Tamil Nadu News
- இன்று ரவுண்ட் கட்டி அடிக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் குளு குளு அப்டேட்!
இன்று ரவுண்ட் கட்டி அடிக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் குளு குளு அப்டேட்!
இலங்கையையொட்டி தென் மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று தென்தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கடுங்குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்கினர். அதாவது காலையில் சூரியன் உதயமாகியும் காலை 10 மணி வரை பனிபொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திடீரென தென்காசி, நெல்லை, தேனி, நீலகிரி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதிக நீர்வரத்து காரணமாக குற்றால அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
இதனிடையே வருகிற 10-ம் தேதி இலங்கையையொட்டி தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வருகிற 10, 11, 12-ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்பு குறைவு எனவும் புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை வானிலை நிலவரம்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

