ரேஷன் அட்டைதாரர்களே ரெடியா இருங்க.! தேதி குறித்த தமிழக அரசு.! மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 2026 மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் தேதி அறிவிப்பு.

ரேஷன் கடைகள்
தமிழ்நாடு முழுவதும் 34,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் நேரடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆனால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளால் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாங்க முடியாத சூழல் ஏற்பட்டது.
தாயுமானவர் திட்டம்
இதனை கருத்தில் கொண்டு 65 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு வீட்டுக்கே வந்து ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் தாயுமானவர் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் 21 லட்சத்துக்கும் மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகின்றனர். தாயுமானவர் திட்டத்தில் எப்போது வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தேதியும் தமிழக அரசு மாதந்தோறும் அறிவித்து வருகிறது. அந்த வகையில், 2026 ஜனவரி மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோக தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்
இதுதொடர்பாக தமிழக அரசின் கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜனவரி மாதத்தின் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னையில் அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள்
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.