- Home
- Tamil Nadu News
- பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! கனமழையால் வெளியான அறிவிப்பு! ஆசிரியர்கள், மாணவர்கள் குஷி!
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! கனமழையால் வெளியான அறிவிப்பு! ஆசிரியர்கள், மாணவர்கள் குஷி!
கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளை அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுவையில் கொட்டித் தீர்க்கும் மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்து வரும் நிலையில், புதுச்சேரியிலும் ஒய்வெடுக்காமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. ஓயாமல் கொட்டிய மழையால் புதுவையில் உள்ள சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளநீர் சூழ்ந்தது
மேலும் தொடர் மழை காரணமாக கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், லாஸ் பேட்டை ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் குளம்போல் தேங்கியது. கனமழை காரணமாக புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலைகளும் மழைநீர் பெருக்கடுத்து ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் காரைக்காலிலும் தொடர்ந்து மழை கொட்டியது.
பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் நாளை (அக்டோபர் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவ மாணவிகளின் நலன் கருதி நாளை அனைத்து தனியார் பள்ளி அரசு பள்ளி தனியார் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி மேல் வளிமண்டல சுழற்சி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவி வருகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் அந்த பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இது மேற்கு-வடமேற்குப் போக்கில் நகர்ந்து மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என புதுச்சேரி மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.