தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை வெளுத்துக் கட்டி வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. நாளை திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

கனமழை தொடர்பாக உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திடவும் உத்தரவிட்டார்.

பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு

இந்நிலையில், பருவமழை விடாமல் வெளுத்து வாங்கும் நிலையில், பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கியமான உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. அதாவது பள்ளி வளாகத்தில் கட்டடங்கள், கழிப்பறைகள், சுவர்களை ஆய்வு செய்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும். பள்ளியில் திறந்த வெளி கிணறு, கழிவு நீர் தொட்டி, கூரை புனரமைப்பு, மின் இணைப்பை கண்காணிக்க வேண்டும்.

மாணவர்களிடம் விழிப்புணர்வு

பள்ளிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் தேங்கினாலும் அவற்றை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பது குறித்து மாணவர்களிடம் ஆசிரியர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சுற்றிக்கை அனுப்பியுள்ளார்.