- Home
- Tamil Nadu News
- நேற்று 15 இடங்களில் சதம் அடித்த வெயில்! மாலை சென்னையை குளிர்வித்த மழை! இன்றைய நிலவரம் என்ன?
நேற்று 15 இடங்களில் சதம் அடித்த வெயில்! மாலை சென்னையை குளிர்வித்த மழை! இன்றைய நிலவரம் என்ன?
தமிழகத்தில் 15 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது. மதுரையில் அதிகபட்சமாக 106.7 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலையில் திடீர் மழை பெய்தது.

நேற்று 15 இடங்களில் சதம் அடித்த வெயில்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மதுரை, தலைநகர் சென்னை உள்ளிட்ட இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்கினர். இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது. அதாவது மதுரை நகரம் - 104.72 டிகிரி, திருச்சி, கரூர் பரமத்தி, நாகப்பட்டினம் - 102.2 டிகிரி, வேலூர் - 101.84 டிகிரி, ஈரோடு - 101.12 டிகிரி, அதிராம்பட்டினம், நுங்கம்பாக்கம் - 100.76 டிகிரி, மீனம்பாக்கம் - 100.58 டிகிரி, புதுச்சேரி, தஞ்சாவூர் - 100.4 டிகிரி, காரைக்கால், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை - 100.04 டிகிரி பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் நேற்று சுட்டெரித்து வந்த நிலையில் மாலை நேரத்தில் சென்னை, புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து, திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. போரூர், கிண்டி, ஆலந்தூர், சைதாப்பேட்டை, கோயம்பேடு, அண்ணாநகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, அடையாறு, எழும்பூர், பெரம்பூர், எண்ணூர், மணலி, கொடுங்கையூர், மாதவரம், புரசைவாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால், வேலை முடிந்து திரும்பிய வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானிலை நிலவரம்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.