- Home
- Tamil Nadu News
- அரசு பேருந்தின் டயர் வெடித்து கழன்று ஓடிய திகில் சம்பவம்! அலறிய 55 பயணிகளின் நிலை என்ன?
அரசு பேருந்தின் டயர் வெடித்து கழன்று ஓடிய திகில் சம்பவம்! அலறிய 55 பயணிகளின் நிலை என்ன?
ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் 55 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அரசுப் போக்குவரத்துக் கழகம்
போக்குவரத்து துறைக்கு சொந்தமான எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மொத்தம் உள்ள 20 ஆயிரத்து 260 பேருந்துகள் மூலம் நாளொன்றுக்கு ஏறத்தாழ 1.76 கோடி மக்கள் பயணிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்களுக்கும் அரசு பேருந்து சேவை கிடைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அவ்வப்போது அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பு இல்லாமல் சக்கரம் கழன்று ஒடும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
55 பயணிகளுடன் சென்ற பேருந்து
இந்நிலையில் மதுரை - ராமேஸ்வரம் வழித்தடத்தில் இருந்து பல்வேறு கோட்டங்களை சேர்ந்த குறிப்பாக மதுரை, காரைக்குடி, சிவகங்கை அரசு பேருந்துகள் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் கண்ணன் (54) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பேருந்தில் 55 பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
முன் பக்க டயர் வெடித்து விபத்து
அப்போது பேருந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தட்டான்குளம் வந்துக்கொண்டிருந்த போது இடது பக்கத்தின் முன் பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது மட்டுமல்லாமல் 100 மீட்டர் தூரம் கழன்று ஓடியது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டனர். ஆனால், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 55 பயணிகளும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
உயிர் தப்பிய பயணிகள்
உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி வேறு பேருந்தில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் போக்குவரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.