பள்ளி ஆசிரியர்களுக்கும் இலவசமாக ஏஐ படிப்புகள்.! ஐஐடி சொன்ன குட் நியூஸ்!
School Teacher: சென்னை ஐஐடி, பள்ளி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான இலவச ஆன்லைன் படிப்புகளை வழங்குகிறது. அக்டோபர் 10ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ்
ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தற்போது தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திவிட்டது. ஐடி உள்பட பல துறைகளில் ஏஐகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. ஏஐகளால் வேலை இழப்புகள் ஒருபக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இன்னும் 5 ஆண்டுகளில் 99 சதவீத வேலைகள் ஏஐயால் பறிக்கப்படும் என்று பகீர் தகவலும் வெளியாகியுள்ளது.
இந்திய தொழில்நுட்பக் கழகம்
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) பள்ளி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான இலவச ஆன்லைன் படிப்புகளை தொடங்கவுள்ளது. வகுப்பறை கற்பித்தலில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் திறன்களை அவர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும். மத்திய அரசின் சுயம் பிளஸ் முயற்சியின் கீழ் இந்த திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் இலவசமாக ஏஐ படிப்புகள் வழங்கப்பட உள்ளதாக சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.
பள்ளி ஆசிரியர்கள்
இது தொடர்பாக சென்னை ஐஐடியில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வகுப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) படிப்புகளை சென்னை ஐஐடி விரிவுபடுத்துகிறது. இந்த படிப்புகள் சென்னை ஐஐடி பிரவர்தக் டெக்னால ஜிஸ் அறக்கட்டளையுடன் இணைந்து ஸ்வயம் பிளஸ் மூலம் ஆன்லைன் முறையில் வழங்கப்படுகின்றன.
செயற்கை நுண்ணறிவு
முன்னர் வழங்கப்பட்ட 5 படிப்புகளுடன், ஆசிரியர்களுக்கான ஒரு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. மொத்தம் 25 முதல் 45 மணி நேரம் வரை கால அளவு கொண்ட இந்தப் படிப்பு, இலவசமாக வழங்கப்படுகிறது. சான்றிதழ் பெற விரும்புவோர், தேர்வுகள் மூலம் குறைந்த கட்டணத்தில் பெறலாம். கற்பித்தல், மதிப்பீடு மற்றும் மாணவர் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கு அத்தியாவசியமான செயற்கை நுண்ணறிவு மற்றும் நடைமுறை கருவிகளைப் பெற ஆர்வமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இந்த படிப்புகள், செயற்கை நுண்ணறிவு கல்வியை உள்ளடக்கியதாகவும், அனைத்துத் துறைகளிலும் அணுகக் கூடியதாகவும் அமைந்திருக்கும். இவை பொறியியல் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், கலை, அறிவியல், வணிகம் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த கற்பவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய செயற்கை நுண்ணறிவு பாடத் திட்டத்தை, ஐஐடி இயக்குநர் காமகோடி கடந்த திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இதில் சேர விரும்புவோர் https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி அக்டோபர் 10ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.