விஜய் கட்சி மாஜி நிர்வாகியை திமுகவிற்கு தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி
தமிழக வெற்றிக்கழகத்தில் பணியாற்றி வந்த வைஷ்ணவி, கட்சியில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால் விலகி திமுகவில் இணைந்தார். கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இல்லாததாலும், மக்கள் பணிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டதாலும் விலகுவதாகத் தெரிவித்தார்.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தவர் கோவையை சேர்ந்த வைஷ்ணவி, கட்சியில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால் தவெகவில் இருந்து விலகுவதாக பரபரப்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இந்தச் சமூகத்தில் மாற்றம் ஒன்று மலராதா என்றே எனது அரசியல் பயணத்தைத் தவெக-வில் தொடங்கினேன். ஆனால், தொடர்ந்து நிராகரிப்பை மட்டுமே சந்தித்து. கடந்த மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.
என் வளர்ச்சியைத் தடுப்பதாக நினைத்து கட்சியின் வளர்ச்சியை தடுக்கச் சிலர் செயல்படுகிறார்கள். தொடர்ந்து நிராகரிக்கப்பட்டேன். உயர்மட்ட நிர்வாகிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாததாலும் எனது வார்டில் இருக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கொடுக்கக்கூட எனக்கு அனுமதி கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டேன் என தெரிவித்தார் மேலும் என்னுடைய மக்கள் பணிக்கு ஒரு சிலர் முற்றுப் புள்ளி வைக்க நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது.
மக்களுக்கான சேவையை எந்த தளத்தில் இருந்தாலும் நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். இன்று முதல் நான் என்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் வைஷ்ணவி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தில் ஒரு வருடமாக பயணித்தேன், இளைஞர்கள் அரசியலில் பங்காற்றுவதை ஊக்குவிப்பார்கள் என நினைத்தேன். ஆனால் அதற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இளைஞர்களை அரசியல் ஊக்குவிக்கும் கட்சியான நினைத்த நிலையில் அவர்கள் பாஜகவின் மற்றொரு திரையாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். அதனால் திமுகவில் இணைந்து விட்டேன் என வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.